தளபதி என்ற பெயர் மன்னர் என்பதை விட மாஸ் காட்டுவதாக கெத்து காட்டுகிறது. அதனால்தான் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மம்முட்டி இருவரும் இணைந்து நடித்த படத்துக்கு தளபதி என்று இயக்குனர் மணிரத்னம் டைட்டில் வைத்தார். அந்த படமும் மெகா ஹிட் படமாக இருந்தது.
தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி மகன் ஸ்டாலினுக்கு அரசியல் தளபதி என்ற பட்டப் பெயரில் அழைத்தனர். கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக தலைவராக மாறிய பிறகு தளபதியார் என்று அழைத்து திமுகவினர் அவரை அழைக்கின்றனர். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரான பிறகு சின்னவர் என்று திமுகவினர் அழைக்கின்றனர்.
இதற்கிடையே நடிகர் விஜய்க்கு இளைய தளபதி என ஆரம்பத்தில் பட்டப் பெயர் வைக்கப்பட்டது. அதன்பிறகு அவர் டாப் ஸ்டார் நடிகராக மாறி 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிறகு இளைய என்ற பெயர் தவிர்க்கப்பட்டு, தளபதி விஜய் என்று அழைக்கப்படுகிறார். இப்போது தமிழக வெற்றிக் கழகம் தலைவரான பிறகு, ஸ்டாலினை திமுகவினர் அழைப்பது போலவே விஜயையும் தளபதி என்றே தவெக கட்சியினர் அழைக்கின்றனர்.
அதனால் இப்போது திமுகவில் ஒரு தளபதி ஸ்டாலின், தவெக கட்சியில் விஜய் ஒரு தளபதி என்ற குழப்பம் வந்துவிட்டது. நல்லவேளையாக உதயநிதியை சின்ன தளபதி, குட்டித் தளபதி, ஜூனியர் தளபதி என அழைக்காமல் திமுகவினர் சின்னவர் என்று அழைப்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இந்த சின்னவர் பட்டமும் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நடிகர் சத்யராஜூக்கு புரட்சித் தமிழன் என்ற பட்டப் பெயர் உள்ளது. புரட்சி நடிகர் என்ற பட்டப் பெயர் உள்ளது. நடிகர் கமல்ஹாசனை உலக நாயகன் என்கின்றனர். விஜயகாந்தை கேப்டன் என்றனர். அர்ஜூனை ஆக்ஷன் கிங் என்றனர். அத்துடன் நடிகர் பரத்தை சின்ன தளபதி என்றும் அழைத்தனர்.
ஆனால் இப்போது நடிகர் சிவகார்த்திகேயனை சின்ன தளபதி என்று அழைக்க துவங்கி விட்டதால், மார்க்கெட் இழந்த நிலையில் உள்ள நடிகர் பரத், தன்னுடைய சின்ன தளபதி பட்டத்தையும் இழந்து விட்டார். இதற்கிடையே திடீர் தளபதி என்றும் சிவகார்த்திகேயனை ஒரு தரப்பில் இணையத்தில் விமர்சிக்கின்றனர். இதற்கிடையே ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சரவணன், ஆரம்பத்தில் இளைய தளபதி சரவணன் என்று எனக்குதான் பட்டப் பெயர் இருந்தது என்றும் கூறி தன் வேதனையை சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார். தளபதியால் இத்தனை தலைவலியா என்று ரசிகர்கள் தலையில் அடித்துக்கொள்கின்றனர்.





