சூர்யா ரசிகர்கள் இரண்டு ஆண்டுகள் காத்திருந்ததற்கு தற்போது முடிவு பிறந்திருக்கிறது. நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது கங்குவா. இதற்கான படப்பிடிப்பை மட்டும் கிட்டத்தட்ட ஓர் ஆண்டுகளாக நடத்தி இருக்கிறார்கள். அண்ணாத்த படத்தை தொடர்ந்து இதனை இயக்கி இருக்கிறார் சிறுத்தை சிவா.
ஃபேண்டஸி திரைப்படம் ஆகவும் அதே சமயம் ஆக்சன் கலந்த காட்சிகளும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கிறது. முந்தைய ஜென்மத்திற்கும் தற்போதைய காலத்திற்கும் இடையே உள்ள தொடர்பு தான் இந்த திரைப்படத்தின் ஆன்லைன் கதை. இதற்கு வசனங்களை எழுதி இருப்பது வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி.
கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் செலவில் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். யூ வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. ஒன்று இரண்டல்ல பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதாணி நடித்திருக்கிறார். வில்லனாக மிரட்டுகிறார் பாபி தியோல். இதுபோக யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, நட்டி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் சூழலில் இதன் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதன் ப்ரோமோஷன் பணிகளுக்காக மும்பை டெல்லி ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு சூர்யா சென்றார். இதில் ஹைதராபாத்தில் பேசும்போது அவர் கண்கலங்கினார். இரண்டு ஆண்டுகளாக தான் படமே கொடுக்கவில்லை என்றும், இருப்பினும் தனது சூர்யா சன் ஆப் கிருஷ்ணன் திரைப்படம் ரி ரிலீஸ் ஆகும் போது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்றதாகவும் தெரிவித்தார்.
இது ஒரு பக்கம் இருக்க, கங்குவா திரைப்படத்தின் நேரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இரண்டு மணி நேரம் 34 நிமிடங்கள் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சினிமா விமர்சகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பிரம்மாண்டம் என்னும் பெயரில் மூன்று மணி நேரம் இழுத்தடிக்காமல் இரண்டரை மணி நேரம் சுருக்கியது நல்ல யுக்தி என்று குறிப்பிட்டுள்ளனர். கங்குவா திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.





