கலைத்துறை சார்ந்தவர்களுக்கு மட்டும் வயதும், முதுமையும் வரக்கூடாது. காலம் காலமாக அவர்கள் ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற வரம் கிடைத்திருந்தால், மிகவும் நன்றாக இருந்திருக்கும். சிறந்த திரைக்கலைஞர்கள் மறையும் போது ரசிகர்களின் மனதில் இப்படிதான் தோன்றுகிறது.
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகர் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் ஆர் சுந்தர்ராஜன் சுருளிராஜன் நாகேஷ் சந்திரபாபு தேங்காய் சீனிவாசன் எஸ்வி ரங்காராவ் மனோரமா ஆச்சி ஜெயலலிதா பத்மினி சாவித்திரி என எத்தனை அற்புதமான ஆளுமை நிறைந்த கலைஞர்களை தமிழ் சினிமா இழந்திருக்கிறது.
அந்த வகையில் நடப்பாண்டிலும் சில முக்கிய கலைஞர்களை தமிழ் சினிமா இழந்திருக்கிறது. இதில் சிலர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர்கள். சிலர், நூறுக்கும் குறைவான படங்களில் நடித்தவர்கள் என்றாலும் ரசிகர்களின் மனதில் நின்றவர்கள், ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாதவர்கள்.
இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி, பல நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த நடிகர் டெல்லி கணேஷ், பல படங்களில் வில்லன் கேரக்டரில் மிரட்டிய நடிகர் டேனியல் பாலாஜி, தயாரிப்பாளர் மற்றும் நடிகர் மோகன் நடராஜன், இயக்குனர் பசி துரை ஆகியோர் இந்த ஆண்டில் மறைந்து விட்டனர்.
இயக்குனர்கள் சுரேஷ் சங்கையா, குடிசை ஜெயபாரதி, நடிகை சிஐடி சகுந்தலா இயக்குனர்கள் விடி சபா தயாரிப்பாளர் டில்லி பாபு பாடகி உமாரமணன் காமெடி நடிகர் சேஷூ, இசையமைப்பாளர் விஜய் ஆனந்த், ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன், நடிகர்கள் பிஜிலி ரமேஷ், பிரதீப் விஜயன் நடிகர் செவ்வாழை ராசு, நடிகர் விஸ்வேஸ்வர ராவ், அடடே மனோகர் டிவி நடிகர் நேத்ரன் உள்ளிட்டோர் இந்த ஆண்டில் கலையுலக வாழ்வை விட்டு மறைந்தனர்.
இவர்களில் ஒரு சிலர் மிக பிரபலமானவர்களாக உள்ளனர். ஒரு சிலர் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பரிச்சயம் இல்லாவிட்டாலும் பல படங்களில் அவர்கள் நடித்துள்ளனர். அவர்களது பெயரே தெரியாமல் அவர்களது நடிப்பை ரசிகர்கள் ரசித்த நிலையில், அவர்களது பெயர் வெளிச்சத்துக்கு வராமல் போய்விட்டது. முதுமை, நோய், விபத்து போன்ற காரணங்களால் இந்த கலைஞர்கள் மறைந்தாலும் ரசிகர்களில், அவர்கள் நடித்த கேரக்டர்களில் என்றென்றும் வாழ்கின்றனர்.





