மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை பாவனா. இவர் கடந்த 2006ம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே பெரிய வெற்றியை கொடுத்து அடுத்தடுத்த தமிழ் பட வாய்ப்புகளை பாவனாவுக்கு பெற்றுத் தந்தது.
அதன்பிறகு தமிழில் வெய்யில் தீபாவளி வாழ்த்துக்கள் கூடல் நகர் ஜெயம் கொண்டான் அசல் உள்ளிட்ட பல படங்களில் நடிகை பாவனா நடித்திருக்கிறார். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து பாவனா முன்னணி நடிகையாக உள்ளார். கடந்த 2018ம் ஆண்டு நவீன் என்கிற தொழிலதிபரை பாவனா திருமணம் செய்து கொண்டார்.
அவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மலையாளம் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக உள்ள பாவனா ஒரு படத்தின் ஷூட்டிங்கில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான ஒரு அனுபவம் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசி இருக்கிறார். அதில் பிரபல நடிகர் ஜெயராமும் அவருடன் இருந்திருக்கிறார்.
இதுகுறித்து நடிகை பாவனா கூறியதாவது, நானும் நடிகர் ஜெயராமும் நடித்த ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்தது. அந்த படத்தில் ஜெயராமுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காமெடி உணர்வு அதிகம் உள்ள நடிகர்களில் ஜெயராமும் ஒருவர். தாய்லாந்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது கிடைத்த ஓய்வு நேரத்தில் நகைச்சுவைக்காக நாங்கள் பிச்சை எடுக்க திட்டமிட்டோம்.
அங்கு ரோட்டில் ஒரு இடத்தில் இருவரும் தரையில் அமர்ந்து கண்ணில் பட்ட ஒன்றை எடுத்து வாசித்தோம். நான் பிறந்த நாள் முதல் என்பது போன்ற பாடல்களை பாடினோம். முதலில் அந்த பாடல் சுவாரசியமாக இல்லை. சிறிது நேரம் கழித்து நான் நடனம் நடனமாடுவேன். ஜெயராம் பாடல் பாடுவார். அடுத்ததாக ஜெயராம் நடனமாடுவார். இப்படியே நாங்கள் மாறி மாறி செய்து கொண்டிருந்தோம்.
அப்போது அங்கு சென்று கொண்டிருந்தவர்கள் கையில் இருந்த பணத்தை வைத்து விட்டு சென்றனர். அதற்குள் ஷாட் ரெடி ஆகிவிட்டது. எங்களால் 100 ரூபாய் மட்டுமே சம்பாதிக்க முடிந்தது. அந்த 100 ரூபாயை எல்லோரிடமும் காட்டி இது எங்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணம் என்று சொன்னோம். நாங்கள் தரையில் அமர்ந்து கெஞ்சி பிச்சை எடுத்துக் கொண்டிருந்த காட்சிகளை வீடியோவாக எடுத்து படத்தின் இறுதிக்காட்சியில் சேர்த்து விட்டனர் என்று நடிகை பாவனா அந்த சம்பவத்தை கூறியிருக்கிறார்.





