நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார். அவர் நடித்த படங்கள் என்றாலே, ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களில் திருவிழா கூட்டம் போல திரண்டு விடுகிறது. அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் வசூல் மன்னராக திகழ்பவர் ரஜினிகாந்த் தான். அவர் நடிக்கும் படங்களை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய தர்பார், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த போன்ற படங்கள் பெரிய வெற்றியை தராததால் பலத்த ஏமாற்றத்தில் இருந்தார் ரஜினிகாந்த். ஆனால் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் படத்தின் அபார வெற்றியால் துள்ளிக்குதித்த ரஜினி, இப்போது வேட்டையன் படத்தை முடித்துவிட்டு கூலி படத்தில் நடித்து வருகிறார்.
ஜெயிலர் படம், நடிகர் சிவாஜி கணேசன் 40 ஆண்டுகளுக்கு முன் நடித்த பழைய தங்கப்பத்தக்கம் படத்தின் பட்டி டிங்கிரிங் பார்த்த கதைதான் என்றாலும், அனிருத் இசையும், வில்லன் விநாயகம் நடிப்பும் படத்தை வேற லெவலில் ரசிகர்களை மகிழ்வித்தது. 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.
வேட்டையன், கூலி படங்களை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் மீண்டும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு துவங்க உள்ளது. கூலி படப்பிடிப்பில் தற்போது நடித்து வரும் ரஜினிகாந்த் அந்த படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார். ரஜினிகாந்த் அவர் நடித்த படத்தில் முதன்முறையாக 2ம் பாகத்தில் நடிப்பது ஜெயிலர் 2 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட படம்தான் பில்லா. இந்த படம் ரஜினியின் சினிமா வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் ரீமேக்கில்தான் நடிகர் அஜீத்குமார் நடித்து, அதுவும் மாபெரும் வெற்றி பெற்றது. அஜீத்குமாருக்கும் ஒரு பெரிய திருப்பு முனையாக பில்லா அமைந்தது.
ரஜினிகாந்த் நடித்த பில்லா படத்தில் அவருக்கு ஜோடியாக முதலில் நடிக்க அப்போது நடிகையாக இருந்த செல்வி ஜெயலலிதாவை தான் அணுகினார்கள். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். அதன்பிறகுதான் ஜெயலலிதா நடிக்க வேண்டிய கேரக்டரில் ஸ்ரீப்ரியா நடித்தார். சினிமாவில் இருந்து ஜெயலலிதா ஒதுங்கியிருந்த காலம் என்பதால், ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை அவரே நிராகரித்து விட்டார். ஆனால் அதன்பிறகு ரஜினி, ஜெயலலிதா இணைந்து நடிக்கும் வாய்ப்பே ஏற்படவில்லை. ஒருவேளை பில்லா படத்தில் அவர்கள் இணைந்து நடித்திருந்தால், அது சரித்திர சம்பவமாக மாறியிருக்கும்.





