நடிகர் விஜய் இரண்டு தினங்களுக்கு முன் தனது புதிய கட்சி பெயரை அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை இந்திய தேர்தல் ஆணையத்தில் பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ள விஜய், வரும் சட்டசபை தேர்தல்தான் தனக்கு இலக்கு என்றும் கூறியிருக்கிறார்.
விஜய் அரசியல் வருகை குறித்து சிலர் வாழ்த்து தெரிவித்த நிலையில், ஒரு சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சினிமாவில் பெயரும், புகழும் சம்பாதித்து விட்டால், அடுத்து முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட்டு, அரசியலுக்கு வந்துவிடுகின்றனர். சினிமாவில் ஜெயிப்பதை போல அரசியலில் எளிதாக ஜெயித்துவிடலாம் என கனவு காண்கின்றனர் என பலரும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி, விஜய் அரசியல் வருகை குறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது, விஜய் ஆரம்பித்துள்ள வெற்றி கழகத்தில், க் இல்லை என்றாலும், அவர் வெற்றியை பதிவு செய்துள்ளார். என்னை மாதிரி எத்தனையோ பேர் சினிமாவில் ரசிகர்களாக இருக்கின்றனர்.
அப்படி ரசிகர்கள் இருப்பவர்கள் ஒட்டுமொத்தமாக ஓட்டு போட்டிருந்தால், எப்போதோ விஜயகாந்த் முதலமைச்சராகி இருக்க வேண்டும். கமல்ஹாசன் எம்எல்ஏ ஆகியிருக்க வேண்டும். ஆனால் இது எதுவுமே நடக்கவில்லை. ஏனெனில் மக்களுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கிறது.
மாதம் ஆயிரம் ரூபாய் தந்துவிட்டு, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தலையில் சுமையை ஏற்றி விடுகின்றனர். ஒவ்வொரு குடும்பமும் கஷ்டப்படுகின்றனர். அடுத்து நமக்கு எப்போது விடிவு கிடைக்கப் போகிறது. யார் நமக்காக உண்மையாக உழைக்கப் போகிறார்கள் என மக்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இதில் நடிகர் எந்த இடத்தில் இருக்கிறார் என்று விஜய்க்கே தெரியவில்லை. அவரே அதுபற்றி சொல்லவில்லை. எனக்கு தெரிந்து பாதிப்பு இல்லாத ஒரு கட்சி. காவி கொள்கை இருப்பவர்கள் பாஜகவிற்குதான் ஓட்டு போடுவாங்க. அவங்க ஜோசப் விஜய்க்கு ஓட்டுப் போட மாட்டாங்க. இவருக்கு மைனாரிட்டிதான் ஸ்ட்ராங்க். இதில் காங்கிரஸ் திமுகவுக்குதான் மைனாரிட்டியினரின் ஆதரவு அதிகம். அதனால் விஜய் காங்கிரசை கபளீகரம் செய்துவிடுவார் என நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.





