நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் நேற்று வெளியான படம் மெய்யழகன். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் சூப்பர் ஹிட் படமான 96 படத்தை இயக்கிய டைரக்டர் பிரேம்குமார் இயக்கிய இந்த படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், பாசிடிவ் விமர்சனமும் கிடைத்து வருகிறது. படம் ரிலீஸான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ. 5 கோடி வரை வசூலாகி உள்ளது.
கார்த்தி நடிப்பில், கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ஜப்பான் படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. அதற்கு பின் மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டும் என்ற முடிவில், இந்த மெய்யழகன் படத்தின் கதையை தேர்வு செய்து நடித்தார். இந்த படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடிகர் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோருடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் நாயகியாக நடித்த ஸ்ரீ திவ்யா, நீண்ட நாட்களுக்கு பின் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், தேவதர்ஷினி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளின் உணர்வுகளை சொல்லும் முக்கிய படமாக மெய்யழகன் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மெய்யழகன் படம் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 240 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இந்த படம் ரிலீஸ் ஆன அதே நாளில்தான், ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடித்த தேவரா படமும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தேவரா படம், மெய்யழகன் என 2 படங்களுமே முக்கிய நடிகர்களின் படங்கள் என்பதால் பல ஊர்களில், பல தியேட்டர்களில் 2 காட்சிகள் தேவராவும், 2 காட்சிகள் மெய்யழகன் படமும் திரையிட்டுக்கொள்ள விநியோகஸ்தர்கள் தரப்பில் கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு கார்த்தி தரப்பில் சம்மதிக்கவில்லை.
கார்த்தியை தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த படம் பெரியதா என கேள்வி எழுப்பிய கார்த்தி தரப்பு, மெய்யழகன் படத்தை 4 காட்சிகள் திரையிடும் தியேட்டர்களுக்கு மட்டுமே அனுமதி தந்து, படத்தை திரையிட வைத்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 240 தியேட்டர்களில், அதாவது 240 திரைகளில் மட்டுமே மெய்யழகன் படம் ரிலீஸாகி ஓடி வருகிறது. இப்படி திரைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது , கார்த்தி தரப்புக்குதான் வருமானத்தில் பேரிழப்பு என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.





