ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்தி மாதம் பிறந்து விட்டால் கார்த்திகை முதல் நாளிலேயே சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து, ஐயப்ப பக்தர்கள் விரதம் துவங்கி விடுவர். பலர் 48 நாட்கள் கடுமையான விரதம் இருந்து பெருவழிப்பாதை அல்லது பம்பை வழியாக சபரிமலை சென்று சன்னிதானத்தில் வீற்றிருக்கும் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்து திரும்புவர்.
இப்போது கார்த்திகை மாதம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து, சுவாமிக்கு விரதம் இருந்து வருகின்றனர். சபரிமலையிலும் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சுவாமியை தரிசிக்க வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்தவர் இசைவாணி. கானா பாடகியாக இவர் தெருக்கூத்து மேடைகளிலும், இசை கச்சேரி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாடி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் போட்டியாளராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு சபரிமலை ஐயப்ப சுவாமியை கிண்டல் செய்யும் விதமாக ஐயம் ஸாரி ஐயப்பா என்ற இசைவாணி பாடிய பாடல், ஐயப்ப சுவாமியை வழிபடும் பக்தர்களை இழிவுபடுத்துவதாக இருந்தது. இதையடுத்து மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனம் எழுந்தது.
இதற்கு பதிலடி தரும் விதமாக சிலர், சபரிமலை ஐயப்ப சுவாமியை போற்றும் விதமான பாடல்களை பாடி வருகின்றனர். அதே நேரத்தில் கடவுளை மறுத்து இழிவுபடுத்தும் விதமாக கிண்டல் செய்யும் இசைவாணி போன்றவர்களுக்கு பதிலடி தரும் விதமாக வார்த்தைகளால் அந்த பாடல்களை பாடி வருகின்றனர்.
சமீபத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கி, கைதாகி ஜாமினில் வெளிவந்துள்ள நடிகை கஸ்தூரி கூறியதாவது, நான் இப்போது 2 படங்கள், 2 சீரியல்களில் நடித்து வருகிறேன். தினமும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போடுவதால் எனக்கு ஷூட்டிங் தடைபடுகிறது. எனது மகனின் படிப்பும் பாதிக்கப்படுகிறது. அதனால் இதில் தளர்வு தர கேட்டிருக்கிறேன். மீண்டும் சர்ச்சையாக பேச விரும்பவில்லை. இசைவாணி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை. இதன் மூலமாக அரசின் செயல்பாட்டை புரிந்துக்கொள்ளலாம் என்று கஸ்தூரி கூறியிருக்கிறார்.





