கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் மஞ்சிமா மோகன். இவர் மலையாளத்தில் ஒரு வடக்கன் செல்பி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்தார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா என்ற படம் மூலம் மஞ்சிமா மோகன் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
பிறகு நவரச நாயகன் நடிகர் கார்த்திக் மகன் நடிகர் கௌதம் கார்த்திக் உடன் தேவராட்டம் என்ற படத்தில் மஞ்சிமா மோகன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிறகு அவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது சினிமாவை விட்டு ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் அகமதாபாத்தில் ஒரு கோரமான விமான விபத்து நடந்தது. இந்தியாவை மட்டுமின்றி உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து குறித்தும் அது சம்பந்தமாக தற்போது நடந்து வரும் சில அநாகரிகமான நிகழ்வுகள் குறித்தும் தனது கோபத்தையும் வருத்தத்தையும் நடிகை மஞ்சிமா மோகன் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து நடிகை மஞ்சிமா மோகன் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, மனித நேயம் எங்கே போனது? இதயத்தையே உலுக்குகின்ற ஒரு விபத்தில் பல பேர் தங்களது வாழ்க்கையை இழந்துள்ளனர். ஆனால் இங்கே சில பேர் அதை வைத்து லாபம் சம்பாதிக்க முயற்சிப்பதை பார்க்க முடிகிறது.
அந்த சம்பவத்தை சென்சேஷன் ஆக்கி ஜோதிடம் நியூமராலஜி மூலமாக பயப்படுத்தும் விதமான தவறான தகவல்களை பரப்புவதுடன் மட்டமான ஜோக்குகளை உருவாக்குவது மற்றும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் முகத்தில் இடிப்பது போல மைக்கை நீட்டி அவர்களை பேச சொல்லி வற்புறுத்துவது என பல அநாகரிகமான நிகழ்வுகள் நடக்கின்றன.
இரக்கமும் மரியாதையும் தேவைப்படும் இந்த நேரத்தில் அடுத்த தலைமுறைக்கு நாம் இதைத்தான் உதாரணமாக நிர்ணயிக்கப் போகிறோமா? என்று நடிகை மஞ்சிமா மோகன் கோபமாக கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 12ம் தேதி நடந்த அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.





