மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்த முன்னணி நடிகை மஞ்சுவாரியர். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
சமீபத்தில் கேரளாவில் பிரபல நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 6 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் அவர்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில் விடுதலையான நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் மலையாள நடிகையுமான மஞ்சு வாரியர் நேற்று கொச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது, நடிகை பாலியல் வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. அவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த செயலை திட்டமிட்டு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடி வருகின்றனர்.
இதில் உரிய நீதி கிடைக்கவில்லை. எனவே சதித்திட்டம் தீட்டி அதை நிறைவேற்றியவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் உண்மையான நீதி நிலைநாட்டப்படும் என்று கூறினார். பின்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்த பதிவில் கூறியிருப்பதாவது, மதிப்பிற்குரிய நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். ஆனால் இந்த விஷயத்தில் முழுமையான நீதி கிடைக்கவில்லை.
ஏனென்றால் குற்றம் செய்தவர்கள் மட்டுமே இப்போது தண்டிக்கப்பட்டுள்ளனர். இதை திட்டமிட்டவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பது ஒரு பயமுறுத்தும் உண்மை. அவர்கள் தண்டிக்கப்படும்போதுதான் உயிர் வாழ்வதற்கான நீதி முழுமை அடையும். இது நான் உட்பட சமூகத்தின் காவல்துறை மற்றும் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும்.
இது அவளுக்கு மட்டுமல்ல, இது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரியது. பணியிடத்திலும் தெருக்களிலும் வாழ்க்கையிலும் பயமின்றி தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய சூழ்நிலை அவர்களுக்கு இருக்க வேண்டும் என்று அந்த பதிவில் மஞ்சு வாரியர் குறிப்பிட்டுள்ளார். நடிகர் திலீப் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மலையாள நடிகைகள் கூட்டமைப்பு மேல்முறையீடு செய்வதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது.





