சினிமாவில், வெற்றி பெற்ற பிறகுதான் அவர்கள் மீது அதிகமான வெளிச்சம் பாய்கிறது. அப்போதுதான் மற்றவர்களுக்கும் அவர்களை அடையாளம் தெரிகிறது. தொடர்ந்து சினிமாவில் நடித்தும், பெரிய அளவில் கவனிக்கப்படாமல் போன எத்தனையோ நடிகர்களும் உண்டு. இப்போதும், பழைய படங்களில் சில காட்சிகளில் நடித்த சில நடிகர்கள், அதன்பிறகு மற்ற படங்களில் நடிக்காமலேயே போய் விட்டனர். இது ஹீரோக்களுக்கு மட்டுமல்ல, குணச்சித்திர நடிகர்கள், துணை நடிகர்கள் என பலருக்கும் உண்டு.
சினிமாவை சேர்ந்த குடும்பங்களில் இருந்து வருபவர்கள், துவக்கத்திலேயே அந்த நடிகரின் மகன், அந்த நடிகையின் மகள் என்ற அடையாளத்தை ஒரு விளம்பரமாக ரசிகர்கள் மத்தியில் பெற்று விடுகின்றனர். ஆனாலும், தொடர்ந்து அவர்கள் நடிக்கும் படங்களும், அவர்களது திறமையும்தான் அடுத்தடுத்த படங்களில் அவர்களை நடிக்க வைக்கும். இல்லாவிட்டால், அவர்களும் திரையுலகை விட்டு விரைவில் காணாமல் போய்விடுகின்றனர்.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் வரவு மிக அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். சில வாரிசுகள் நடிக்காவிட்டாலும் படம் இயக்குவது, தயாரிப்பது, இசையமைப்பது, பாடல் பாடுவது என, ஏதேனும் ஒரு விதத்தில் சினிமா துறை சார்ந்தே இருக்கின்றனர். இதற்கு ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன், பிரபு, விஜயகுமார், எடிட்டர் மோகன், நடன மாஸ்டர் சுந்தரம், இயக்குநர்கள் எஸ்ஏ சந்திசேகர், அகத்தியன், கங்கை அமரன், இளையராஜா என பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
ஆனால் சினிமா பின்புலமே இல்லாமல் வந்து, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்று, இன்று முதல் வரிசையில் இருப்பவர்கள் இரண்டே பேர்தான். அதில் ஒருவர் அஜீத்குமார். மற்ற ஒருவர் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய் சேதுபதி. அதுவும், கூட்டத்தில் ஒருவராக, துணை நடிகர்களில் ஒருவராக நின்ற ஒருவர்தான் விஜய் சேதுபதி. இன்று ரஜினி, கமல், ஷாருக்கான் போன்றவர்களின் மெயின் வில்லன் இவராக இருந்து வருகிறார்.
சமீபத்தில், இறைவன் படம் ரிலீஸ் ஆவதையொட்டி நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி மேடையேறி பேசினார். அப்படி பேசுகையில், என்னுடைய முதல் படத்தில் என் சம்பளம் 250 ரூபாய். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடித்த போது என் சம்பளம் 400 ரூபாய். இந்த படத்தில்தான் எனக்கு இன்கிரிமென்ட் கிடைத்தது சந்தோஷமாக இருந்தது. இந்த படத்தில் ஜிம் பாய் ரோல்ன்னு சொன்னாங்க. ஏதோ ஒரு கேரக்டர் கிடைச்சிருக்குன்னு சந்தோஷமா நடிக்க வந்தேன்.
எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில், ஒரு காட்சியில் என் மகன் பாக்ஸர்ன்னு நதியா, ஜெயம் ரவிக்கு ஒரு கெத்தான இன்ட்ரோடெக்சன் கொடுத்து பேசுவார். அப்போது மேடையில் ஜெயம் ரவி இருப்பார். மேடைக்கு கீழே, ஓஏகே சுந்தர் பக்கத்துல, லெப்ட் சைடுல நான் நின்றிருப்பேன். நான் முதலில் பார்த்த ஹீரோ ஜெயம் ரவி தான் என்று கூறி, அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் விஜய் சேதுபதி.





