சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்தவர் சமுத்திரக்கனி. அடுத்து சசிக்குமார் நாயகனாக நடித்த நாடோடிகள் படத்தை இயக்கியவர் சமுத்திரக்கனி. இயக்குனர், நடிகர் என இரட்டை குதிரையில் வெற்றிக்கரமாக சவாரி செய்து வருகிறார் சமுத்திரக்கனி. சிறந்த கலைஞராக இருப்பதால் தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிகளிலும் நடித்து வருகிறார்.
துவக்கத்தில் இயக்குனர் கே பாலசந்தரிடம் பணிசெய்தவர் சமுத்திரக்கனி. பிறகு அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தில் உதவி இயக்குனராக பணிசெய்தார். ரமணி வெர்சஸ் ரமணி காமெடி சீரியலில் ராம்ஜி, தேவர்தஷினியுடன் சில காட்சிகளில் சமுத்திக்கனி நடித்திருக்கிறார்.
மசாலாத்தனமான படங்களை தரும் இயக்குனர்களுக்கு மத்தியில் சமுதாயத்துக்கு சிந்தனை தரக்கூடிய நல்ல படைப்புகளை படமாக தர வேண்டும் என்ற முனைப்பு கொண்ட படைப்பாளிகளில் ஒருவராக சமுத்திரக்கனி இருக்கிறார். கதாநாயகனாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர நடிப்பு என எதுவாக இருந்தாலும் தனிமுத்திரை பதித்து வருகிறார்.
சமுத்திரக்கனியை பொருத்த வரை உயரமான இடத்துக்கு சென்ற நிலையிலும், இன்னும் சினிமாத்தனம் இல்லாத யதார்த்த மனிதராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் விஜய் அழைத்தால் அவரது கட்சியில் சேருவீர்களா என்று கேட்டதற்கு, மக்களுக்கு நல்லது செய்ய அவர் அழைக்க வேண்டியதில்லை. நானே போவேன் என்று அசத்தலான பதில் தந்திருந்தார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரக்கனி பேசியதாவது, எனக்கு ரஜினிகாந்தை ரொம்ப பிடிக்கும். எங்க ஊர் தியேட்டரில் நான் சிவப்பு மனிதன் படம் வருது, பார்க்கணும். ஆனா கையில் காசில்ல. நேராக அந்த தியேட்டர் கேண்டீனுக்கு போனேன். அண்ணே முறுக்கு விக்கிறேன்னு சொன்னேன்.
ஏன்னா, கேண்டீன்ல முறுக்கு வித்தா, படம் ப்ரீயா பார்த்துக்கலாம். அப்படி கேண்டீன்ல முறுக்கு வித்து ஒரு நாளுக்கு 4 ஷோன்னு 14 நாள் மொத்தம் 64 ஷோ நான் சிவப்பு மனிதன் படத்தை பார்த்தேன். எனக்கு அவரை அந்தளவுக்கு பிடிக்கும். எனக்கும் குரு கே பாலசந்தர்தான், அவருக்கும் குரு கே பாலசந்தர்தான் என்று பேசியிருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி.





