மலையாளத்தில் லோக்கல் டிவி சேனலில் காம்பியராக இருந்தவர் நயன்தாரா. பிறகு மனசிகாரே என்ற மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமானார். பிறகு தமிழில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே அவரது துருதுரு அழகும் வசீகரமான பார்வையும் சிரிப்பும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டன.
தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிய நயன்தாரா, ஒரு கட்டத்தின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள நாயகியை மையப்படுத்திய படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற இமேஜூக்கு வந்தார். ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை அவர் சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டது.
ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான எந்த படமும் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாராவின் 75 வது படம் அன்னபூரணி தோல்வியை தழுவியது. சமீபத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான டெஸ்ட் படமும் சரியாக போகாமல், ரூ. 50 கோடி வரை அந்த ஓடிடி தளத்துக்கு நஷ்டத்தை தந்துள்ளது.
வழக்கமான ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் ஏகப்பட்ட கண்டிசன்களை போடும் நடிகை நயன்தாரா, இப்போது நடித்து வரும் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் மிகவும் அமைதியாக இருந்து வருகிறார். கேரவனுக்கு கூட செல்லாமல் படப்பிடிப்பு தளத்திலேயே இருந்து விடுகிறார். சுந்தர் சி பிரேக் அல்லது பேக்கப் சொல்லாமல் இருக்கிற இடத்தை விட்டு நயன்தாரா நகர்வதில்லை என்றும் அவரே ஒரு நேர்காணலில் சமீபத்தில் கூறியிருக்கிறார்.
இதற்கு காரணம் நயன்தாராவின் படங்களுக்கு முன்பு போல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை என்பதுதான். அதனால் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கூட வேண்டாம் என சமீபத்தில் அறிவித்திருந்தார். தவிர சுந்தர் சி போன்ற பெரிய இயக்குனர்களிடம் வம்பு செய்தால், சிறிதும் யோசிக்காமல் அவர் நாயகியை மாற்றி விடுவார் என்ற அச்சமும் நயன்தாராவுக்கு வந்துள்ளது.
இப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் அடக்கி வாசிக்கும் நடிகை நயன்தாரா, இப்போது முக்கிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார். முன்பெல்லாம் முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்தால் எனக்கும் முக்கியத்துவம் அதிகம் இருக்க வேண்டும் என அடம்பிடித்த அவர், முன்னணி ஹீரோக்கள் படத்தில் எந்த கேரக்டர் என்றாலும் நடிக்க தயாராக இருக்கிறார். ஏனெனில் டாப் ஹீரோக்கள் படத்தில் இருந்தால்தான் மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள முடியும். அத்துடன் தனது சம்பளத்திலும் சில கோடிகளை குறைத்து சலுகை தரவும் முடிவு செய்திருக்கிறார்.





