நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்து பெரிய வெற்றியை பெற்ற படம் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு படம்தான். அதன்பிறகு சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு பத்து தல போன்ற படங்கள் அந்தளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. 2 ஆண்டுகளாக சிம்பு படம் இல்லாமல் அவரது ரசிகர்கள் பலத்த விரக்தியில் உள்ளனர்.
இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு நடித்த தக்லைப் படம் வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த காம்பினேஷன், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் பெரிய வெற்றியை பெற்றது.
நடிகர் சிலம்பரசன் இப்போது தாய்லாந்தில் இருந்து வருகிறார். அவரது பிறந்த நாள் வருகிற பிப்ரவரி மாதம் 3ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நாளில் சிம்பு தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
சிம்பு ஏற்கனவே அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்பு சில ஆண்டுகளாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் ஒரு வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் இருந்து வருகிறது. ஆனால் படப்பிடிப்பு தான் துவங்கப்படாமல் பல காரணங்களால் தடைபட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க நடிகர் சிம்பு கதை கேட்டு ஓகே சொல்லி இருக்கிறார். முதலில் இந்த படத்தில் நடித்த பிறகு 2வது படமாக அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படமும், 3வது படமாக தேசிங்கு பெரியசாமி இயக்கும் படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதன்படி வருகிற பிப்ரவரி 3ம் தேதி பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. மிக விரைவில் படப்பிடிப்பை துவங்கி, இந்த ஆண்டில் சுதந்திர தினம், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி என முக்கிய பண்டிகை தினத்தில் இந்த படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





