இயக்குனர் எஸ்ஜே சூர்யாவுக்கு தமிழ் சினிமாவில் இயக்குனராக பெரிய அங்கீகாரத்தை அடையாளத்தை பெற்றுத் தந்தது அவர் இயக்கிய முதல் படம் வாலி. இதில் அஜீத்குமார் அண்ணன் தம்பி என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்த படம் அஜீத்குமாருக்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக இருந்தது. ஏனெனில் இதில் ஒரு கேரக்டர் வில்லனாக நடித்திருப்பார்.
அதே போல் இந்த படத்தில்தான் நடிகர் விவேக் காமெடி பெரிய அளவில் கவனமும் வரவேற்பையும் பெற்றது. வேலையில்லாத பட்டதாரியாக அவர் சொந்தமாக செய்யும் சில வேலைகளும் அதில் அவர் செய்யும் காமெடியும் பெரிய அளவில் ரசிக்க வைத்தது. விவேக் காமெடி திரை பயணத்தில் வாலி அவருக்கு மிக முக்கியமான ஒரு படமாகும்.
அதே போல் இந்த படத்தில் நாயகியாக சிம்ரன் நடித்திருந்தார். அதுவரை அழகான ஒரு இளம் நடிகையாக நல்ல நடனக் கலைஞராக மட்டுமே ரசிகர்களை கவர்ந்த சிம்ரன் இந்த படத்தில் நடிப்பில் தனி முத்திரை பதித்திருப்பார். தனது கணவரின் அண்ணன் தன்னை விரும்புவதை அறிந்த பிறகு அவரது பதட்டமும் பரிதவிப்பும் கோபமும் வெறுப்பும் அழுத்தமான நடிப்பை தந்திருப்பார்.
ஆனால் வாலி படத்தில் முதலில் அஜீத்குமாரின் மனைவி கேரக்டரில் நடிக்க இருந்தது சிம்ரன் அல்ல என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. வழக்கமாக பல படங்களில் இது நடக்கிறது. ஒரு ஹீிரோ, அல்லது ஹீரோயின் அந்த படத்தில் நடிக்க பேசப்பட்டு கால்ஷீட் சம்பளம் போன்ற பல காரணங்களால் அவர்கள் நடிக்க முடியாமல் போய் மற்றவர்கள் அந்த கேரக்டரில் நடிப்பது சாதாரணம்தான். அந்த வகையில் வாலி படத்தில் முதலில் ரம்பா தான் நடிக்க பேசப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை ரம்பா கூறியதாவது, வாலி படம் முதல்ல எஸ்ஜே சூர்யா என்கிட்ட தான் கதை சொன்னார். என்னோட முதல் படம். அஜீத் சார் நடிக்கிறார். நீங்க ஹீரோயினா நடிக்கணும் என்று சொன்னார். ஆனா எனக்கு கால்சீட் பிரச்சனை இருந்ததால் வாலி படம் பண்ண முடியவில்லை.
அப்புறம் அந்த படத்துல எனக்கு பதிலா சிம்ரன் நடிச்சாங்க. படம் வந்ததும் அப்புறம் நான் நினைச்சது, அப்பாடா நான் நடிக்கல, எப்படியோ தப்பிச்சேன். என்னமா நடிச்சிருப்பாங்க சிம்ரன்? வேற லெவல் ஆக்டிங். அந்த கேரக்டர் நான் பண்ணியிருந்தால் சத்தியமா சிம்ரன் அளவுக்கு பண்ணியிருக்க முடியாது. அவங்க ஆக்டிங் அப்படி இருந்துச்சு அந்த படத்துல என்று நடிகை ரம்பா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





