இன்றைய காலகட்டத்தில் பெண்களின் சுதந்திரம் என்பது பொதுவெளிகளில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. பெண்களின் அடிமைத்தனம் களையப்பட வேண்டும் என்பது ஒரு முக்கிய வாதமாக இருந்தாலும் பெண் சுதந்திரம் குறித்த தவறான புரிதலால் அது தவறான பாதையாக மாறுகிறதோ என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் உடுத்தும் ஆடைகளில் சுதந்திரம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாக இருந்தாலும் உடலில் அந்தரங்க பாகங்கள் அப்பட்டமாக தெரியும் வகையில் ஆடை அணிவது சுதந்திரமாக கருதப்படுகிறது. இதை பெண்களே எதிர்க்கும் ஒரு மனோபாவமும் ஏற்பட்டுள்ளது.
எல்லாவிதமான ஆடைகளை அணிந்துக்கொள்ளும் ஆசை விருப்பங்கள் இருந்தாலும் பெண்கள் சில ஆடைகளை பொதுவெளியில் அணிவதற்கு கணவர்கள் மட்டுமின்றி அவர்களது தந்தை சகோதரர்கள் உறவினர்களே மறுப்பு சொல்வதும் வழக்கமாகி விட்ட நிலையில் இதுகுறித்து நடிகை ரேவதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 1980 மற்றும் 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ரேவதி. ரஜினி கமல் பிரபு கார்த்திக் முரளி என அன்றைய காலகட்டத்தில் இருந்த முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தவர். பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். கவர்ச்சியோ ஆபாசமோ இன்றி நடித்த அவர் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராகவும் உள்ளார்.
சமீபத்தில் ஒரு பிரஸ்மீட்டில் பங்கேற்ற ரேவதியிடம் ஆடை சுதந்திரம் குறித்து கேட்கப்பட்டது. அதுகுறித்து நடிகை ரேவதி கூறியதாவது, எந்த விஷயமாக இருந்தாலும் தனிமனிதர்கள் சொந்தமாக அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். ஒருவரை கைநீட்டி அடிப்பதற்கு எந்த உரிமையும் அருகதையும் யாருக்கும் இல்லை. யார் மீதும் நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதுதான் உண்மை.
பிகினி உடையணிந்து ஒரு பெண் நடந்து செல்ல ஆசைப்பட்டால் அதில் என்ன தப்பு இருக்கு? நாம பார்க்கக் கூடிய பார்வையில் நம்ம மனசில் தான் அப்படி இருக்கிறது. ஒரு கல்யாணத்துக்கு எப்படி டிரஸ் பண்ணீட்டு போகணும்? ஒரு பீச்சுக்கு எப்படி டிரஸ் பண்ணீட்டு போகணும்? பீச்சுல வந்து நாம பட்டுப்புடவை கட்டீட்டு கடலுக்குள்ள இறங்க முடியுமா? முடியாது. சோஷியல் மீடியா கருத்துகள் என்பது முழுக்க வித்யாசமான பேசக்கூடிய இடம். சமூக வலைதளங்களில் வந்ததால் இந்த விஷயங்கள் எல்லாம் கொஞ்சம் வெளியே தெரிகிறது என்று நடிகை ரேவதி கூறியிருக்கிறார்.





