ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ரஜினி நடித்துள்ள படம் வேட்டையன். லைகா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை தசெ ஞானவேல் டைரக்ட் செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும 20 நாட்கள் மீதம் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் டப்பிங் பணிகளும் ஜரூராக நடந்து வருகின்றன.
இதற்கிடையே வேட்டையன் படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தேதி இன்னும் முடிவாகவில்லை. அதே நேரத்தில் நடிகர் சூர்யா நடித்த, சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா படம், வருகிற அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சூர்யா ரசிகர்கள் வெகு ஆவலாக எதிர்பார்த்துள்ளனர்.
ஏனெனில் ஜெய்பீம், சூரரைப் போற்று படங்களுக்கு பிறகு நடிகர் சூர்யாவுக்கு பெயர் சொல்லும்படியான படங்களே எதுவுமே அமையாத நிலையில், இந்த படத்தை தான் அவர் மலை போல நம்பியிருக்கிறார். இந்த படமும் 2 பாகங்களாக வெளிவருகிறது. 2ம் பாகத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிகர் கார்த்தி நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வேட்டையன் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையிலும், சமீபத்தில் சாமியார் ஒருவரை சந்தித்த படத்தின் கதாநாயகன் ரஜினிகாந்த், வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் என்று தகவல் சொல்லி இருக்கிறார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினி தெரிவித்துள்ள இந்த தகவல், கங்குவா படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஏனெனில், ரஜினி படத்துடன் சூர்யா படம் மோதினால் இழப்பு ஏற்படுவது கங்குவா படத்துக்குதான் என்ற நிலைமை ஏற்படும். அதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு நேர்காணலில் கூறுகையில், அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் கண்டிப்பாக ரிலீஸ் செய்யப்படும் பட்சத்தில், கங்குவா படத்தின் ரிலீஸ் கண்டிப்பாக தள்ளிப் போடப்படும் என்று கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில் வேட்டையன் படத்தை இயக்கியுள்ள டைரக்டர் தசெ ஞானவேல், ஏற்கனவே ஜெய்பீம் என்ற படத்தை சூர்யாவை வைத்து இயக்கியவர். அவரது நெருங்கிய நண்பர். அகரம் பவுண்டேஷனில் பொறுப்பில் இருக்கிறார். அதனால் சூர்யாவுக்கு ஆதரவாக, வேட்டையன் படத்தை இன்னும் சில வாரங்கள் தள்ளிப் போட்டு சூர்யாவுக்கு ஆதரவாக தான் நடந்துக்கொள்வார் என்றும் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.





