ஆந்திராவை சேர்ந்தவர் நடிகை ரோஜா. விஜயலட்சுமி என்ற பெயர் கொண்ட அவரை தமிழ் செம்பருத்தி என்ற படத்தில் ரோஜா என்ற பெயரில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. முதல் படமே பெரிய வரவேற்பை ரோஜாவுக்கு பெற்றுத் தந்தது.
தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கடந்த 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. ரஜினி விஜயகாந்த் சத்யராஜ் கார்த்திக் அர்ஜூன் பிரபு என பல முன்னணி ஹீரோக்களுக்கு நாயகியாக நடித்தார். பிறகு இயக்குனர் ஆர்கே செல்வமணியை காதல் திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்ட ரோஜா, ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பணிசெய்தார். கடந்த சட்டசபை தேர்தல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த நிலையில், சந்திரபாபு நாயுடு முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சமீபகாலமாக சினிமா நிகழ்ச்சிகளில் நடிகை ரோஜா ஆர்வமாக பங்கேற்று வருகிறார்.
சென்னையில் நேற்று நடந்த பெப்சி விழாவில் பெப்சி அமைப்பின் தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணியின் மனைவி நடிகை ரோஜா பேசியதாவது, என் கணவர் ஆர்கே செல்வமணி குறித்து பாராட்டி இங்கு பலரும் பேசிய போது எனக்கு பெருமையாக சந்தோஷமாக இருந்தது. ஏன்னா அவருக்கு முதல் பொண்டாட்டி பெப்சிதான். அதுக்கு அப்புறம்தான் நான்.
எப்பவுமே அவருக்கு பெப்சி பெப்சி பெப்சிதான். அவங்களுக்கு என்ன செய்யணும், அவங்க நல்லா இருந்தாதான் சினிமா நல்லா இருக்கும் என்று சொல்லி அவர் எப்பவுமே அதை பத்தி தான் நினைக்கிறார். அதற்காக கடினமாக உழைக்கிறார். அதைப் பற்றி பலரும் பேசும்போது பெருமையாக இருக்கிறது.
நானும் என் பொண்ணும் அவரை கிண்டல் செய்வோம். என்னப்பா எங்களை கண்டுக்கவே மாட்டீங்கறீங்க, எப்ப பார்த்தாலும் பெப்சி பெப்சின்னே இருக்கீங்க என்போம். அதுக்கு அவர் என் மகளிடம், உன்னை உங்க அம்மா பார்த்துக்குவாங்க, நான் அவங்களை பார்த்துக்கணும் என்று சொல்லி விடுவார். இந்த விழா என்னுடைய குடும்ப விழாவாக சந்தோஷமாக இருக்கிறது என்று நடிகை ரோஜா அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





