கன்னட சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் திரைப்படங்கள் இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமாவே உற்று நோக்கும் வகையில் அமைந்து வருகின்றன. இதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக நாம் கே ஜி எஃப் திரைப்படத்தை கூறலாம். பிரசாந்த் நீல் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தின் முதல் பாகமும் சரி இரண்டாம் பாகமும் சரி கன்னட திரை உலகை தாண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் வசூல் சாதனை படைத்தது.
குறிப்பாக கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம், இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை உலுக்கி போட்டது. முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் மட்டுமே நிறைந்த ஒரு திரைப்படத்தில், தாய் சென்டிமென்ட் காட்சிகளை தூவி விட்டு படத்தை பக்காவாக ரெடி செய்திருந்தார் இயக்குனர் பிரசாந்த் நீல். படத்தின் கதாநாயகனாக யஷ்ஷும் கச்சிதமாக பொருந்தி இருந்தார்.
வசனங்கள் தெறி பறக்க, திரையரங்குகளில் விசில் சத்தம் விண்ணைப் பிளக்க, பட்டையை கிளப்பியது கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். அதுமட்டுமல்ல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்து கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல இது பேருதவியாக அமைந்தது.
கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து கன்னட சினிமாவிற்கு மேலும் ஒரு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்தது தான் காந்தாரா திரைப்படம். ரிசப் ஷெட்டி இந்த திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தின் விமர்சனமும் கன்னட சினிமாவை உலுக்கி போட்டது.
தெய்வீக நம்பிக்கையை மையமாக வைத்து, இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் நகர்த்தி இருந்தார் ரிஷப் ஷெட்டி. வனப்பகுதியில் வாழும் ஒரு சமூக மக்களின் நம்பிக்கையாக இருக்கும் தெய்வத்தை மையமாக வைத்து இந்த திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருந்தது. படத்தில், முதல் 10 நிமிட காட்சிகளும் கிளைமாக்ஸ்களும் மிகவும் அற்புதமாக இருந்ததால் காந்தாரா கொண்டாடப்பட்டது.
இப்படியான சூழலில் தற்போது அதன் இரண்டாம் பாகம் ரெடி ஆகி இருக்கிறது. காந்தாரா திரைப்படத்தின் முந்தைய பாகமாக இதனை இயக்கி இருக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து அதன் மூன்றாம் பாகத்தையும் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அதில் முதன்மை கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





