சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள படம் அமரன். சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். அமரன் படம் இதுவரை ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
பிரேமம் என்ற மலையாள படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. முதல் படத்திலேயே அவரது அழகும், நடிப்பும், வசீகரமான பார்வையும் ரசிகர்களை வளைத்துப் போட்டது. தொடர்ந்து மாரி 2, என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்த சாய் பல்லவி, அமரன் படத்தில் நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளார்.
மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில், முகுந்த் மனைவி இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில்தான் சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தில் உள்ள பிளஸ் பாயிண்டுகளில் மிக முக்கியமாக சொல்வது இந்த கேரக்டரில் நடித்த சாய்பல்லவிதான் என்கின்றனர்.
சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு முதன்முறையாக ஜோடி சேர்ந்த நிலையிலும் அந்த இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில் நடிக்காமல், வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸில் 10 நிமிடங்களில் அவரது நடிப்பு விருது பெறும் அளவுக்கு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
அமரன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பால், இந்த படத்தை 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியிடுங்கள். அதுவரை வெளியிடாமல் இருந்தால் தியேட்டர்களுக்கு வரும் ஆடியன்ஸ் கூட்டம் இதே போல் நிறைந்து காணப்படும் என்று தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமரன் படம் தந்த அபார வெற்றிக்கு பிறகு, சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டார். இப்போது அவர் கமிட் ஆகும் படங்களுக்கு ரூ. 55 கோடி வரை சம்பளம் கேட்கிறார். அதே போல் நடிகை சாய்பல்லவியும் தனது சம்பளத்தை ரூ. 3 கோடியில் இருந்து இப்போது ரூ. 6 கோடியாக உயர்த்தி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.





