டிவி நிகழ்ச்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்பவுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
ஆனால் தற்போது 8வது சீசனில் பிக்பாஸ் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். நடிகர் கமல் அளவுக்கு விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் சிறப்பாக பேசுவாரா என்று பார்வையாளர்கள் மத்தியில் சந்தேகமும், குழப்பமும் நீடித்த நிலையில், விஜய் சேதுபதி அதற்கு நேர்மாறாக கமலை விட அசத்தலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
கமல்ஹாசன் பேசுவதில் எப்போதுமே ஒரு தற்பெருமை, சுயகௌரவம், தம்பட்டம் இருக்கும். ஆனால் நடிகர் விஜய் சேதுபதி மிகவும் யதார்த்தமாக பேசுகிறார். அவரது பேச்சில் ஒரு பக்கத்து வீட்டுக்காரர் போன்ற ஒரு அணுகுமுறை இருக்கிறது என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டு இருந்த போது, சில ஆண்டுகளுக்கு முன் அவரது உடல் நலம் சரியில்லாமல் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டார். அப்போது அவரது நெருங்கிய தோழிகளில் ஒருவரான ரம்யா கிருஷ்ணன் இரண்டு வாரங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழில் 24 மணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சிலம்பரசன் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. அதிலும் இந்தியில் 18 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் எப்படி நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாரோ, அதேபோல் மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் நாகார்ஜுனா, இந்தியில் நடிகர் சல்மான்கான், கன்னடத்தில் நடிகர் சுதீப் என இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
தற்போது நடிகை சமந்தா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஒரு வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது. அதாவது சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்த தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏதோ ஒரு காரணத்தால் நாகார்ஜுனா பங்கேற்கவில்லை. அதனால் அந்த ஒரே ஒரு எபிசோடை மட்டும் நடிகை சமந்தா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில், வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்களிடம் சமந்தா கலகலப்பாக பேசும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ : https://x.com/itzSekar/status/1845394758451200175





