தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை படங்கள் வந்த காலகட்டத்தில் எம்ஜிஆரும் சிவாஜியும் கடும் போட்டியாளர்களாக ரசிகர்கள் மத்தியில் கருதப்பட்டனர். அதன்பிறகு வந்த காலகட்டத்தில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் பலத்த போட்டியாளர்களாக ரசிகர்கள் மத்தியில் இருந்தனர். கடந்த பல ஆண்டுகளாக நடிகர்கள் விஜய் அஜீத் குமார் போட்டியாளர்களாக தமிழ் சினிமாவில் கருதப்பட்டனர்.
ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படி சமகால ஹீரோ நடிகர்கள் போட்டியாளர்களாக ரசிகர்களால் கருதப்பட்ட சூழலில் அந்த நடிகர்கள் மத்தியில் நல்ல நட்பும் இணக்கமான புரிதலும் நெருக்கமும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரஜினியும் கமலும் கடந்த 1980 – 90களில் பலத்த போட்டியாளர்களாக கருதப்பட்டனர். அது விஜய் அஜீத்குமார் போட்டியாளர்களாக வரும் வரை பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
அதற்குப் பிறகு அந்த சூழல் அப்படியே மாறிப்போனது. மேலும் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களின் ஜானரும் கமல்ஹாசன் நடிக்கும் ஜானரும் வெவ்வேறு விதமாக இருந்ததால் இரண்டு தரப்பு ரசிகர்களுமே இரண்டு ஹீரோக்களின் படங்களையும் ரசித்துப் பார்க்கும் அளவுக்கு வித்யாசமான படங்களாக வெற்றி படங்களாக அவைகள் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமல்ஹாசனுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என 2 மகள்கள் உள்ளனர். இரண்டு பேருமே திரைப்படங்களில் நடித்துள்ளனர். மூத்த மகள் ஸ்ருதிஹாசன் பாடகியாகவும் உள்ளார். அதேபோல் ரஜினிகாந்தின் 2 மகள்களும் திரைப்படத் துறையில் இயக்குனர்களாக வலம் வருகின்றனர். இந்நிலையில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க கமிட் ஆனார்.
அந்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பதாகவும் அறிவிப்பும் வீடியோவும் வெளியானது. ஆனால் அந்த படம் ஷூட்டிங் இன்னும் துவங்கப்படவில்லை. இந்த நிலையில் அந்த படம் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு நேர்காணலில் பேசியதாவது, இயக்குனர் நெல்சன் இந்த படத்தில் என்ன செய்யப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள பெரிதும் ஆவலாக இருந்து வருகிறேன். நான் இந்த படத்தில் இல்லை என்பதையும் உறுதியாக சொல்லி விடுகிறேன்.
கூலி படத்திற்கு பிறகு நான் ரஜினி சாரின் ரசிகையாகி விட்டேன். ரஜினி கமல் இணையும் இந்த படம் திரைத்துறையின் உண்மையான கொண்டாட்டமாக இருக்கும் என்று ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் திமுக கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததால் இந்த படம் இப்போது உருவாகவில்லை. அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. மேலும் இந்த படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல் உள்ளது.





