கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. ரஜினிகாந்த் கமல்ஹாசனுடன் பல படங்களில் நடித்தார். தொடர்ந்து இந்திக்கு சென்று அங்கும் முன்னணி நடிகையாக மாறினார். நடிகர் அனில் கபூரின் அண்ணன் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி கபூர் பிரபல நடிகையாக உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் ஓட்டல் அறை பாத்ரூமில் நடிகை ஸ்ரீதேவி இறந்து கிடந்தார். அவரது மறைவில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. அவர் கொலை செய்யப்பட்டதாக இன்னும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே பாகுபலி படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா சிவகாமி தேவி கேரக்டரில் நடிகை ஸ்ரீதேவியை நடிக்க வைக்க இயக்குனர் ராஜமவுலி விரும்பியதாகவும், ஆனால் ஸ்ரீதேவி போட்ட சில கண்டிஷன்களால் அவர் பாகுபலி படத்தில் நடிக்கவில்லை என்றும் ஒரு தகவல் வெளியானது. ஸ்ரீதேவி தனக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும், தனக்காக ஓட்டலில் கூடுதலாக ஒரு அறை மற்றும் படப்பிடிப்புக்கு வரும்போது எனது குழந்தைகளுக்கும் கூடுதலாக விமான டிக்கெட்கள் கேட்டதால் அவர் தவிர்க்கப்பட்டதாக இயக்குனர் ராஜமவுலி ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
இதுகுறித்து நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் விளக்கமாக கூறியதாவது, பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி கேரக்டரில் ஸ்ரீதேவி நடிக்க ராஜமௌலி அணுகியது உண்மைதான். அவர் எங்கள் வீட்டுக்கே வந்து கதை சொன்னார். அந்த கேரக்டர் மீது ஸ்ரீதேவிக்கு ஆர்வம் ஏற்பட்டதால் அவருக்கு ராஜமவுலி மீது அதிக மரியாதை ஏற்பட்டது. ஆனால் பாகுபலி படத்தில் ஸ்ரீதேவி நடிக்காததற்கு காரணம் ராஜமவுலி அல்ல அந்த படத்தின் தயாரிப்பாளர்கள்தான் காரணம்.
கதையை சொல்லிவிட்டு ராஜமவுலி சென்ற பிறகு படத்தின் தயாரிப்பாளர்கள் வீட்டுக்கு வந்து சம்பளம் குறித்து பேசினர். ஆனால் ஸ்ரீதேவி ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தை காட்டிலும் குறைவான சம்பளத்தை தர அவர்கள் முன் வந்தனர். ஸ்ரீதேவி நடித்தால் பாகுபலிக்கு இந்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று தெரிந்தும் இவ்வாறு அவர்கள் நடந்து கொண்டனர். அதனால்தான் அந்த படத்தில் இருந்து ஸ்ரீதேவி விலகினார்.
எங்கள் வீட்டில் நடந்த விஷயங்களை தயாரிப்பாளர்கள், இயக்குனர் ராஜமவுலியிடம் தவறாக கூறிவிட்டனர். ஓட்டலில் ஒருதளத்தை முன்பதிவு செய்ய கேட்டது உண்மைதான். அப்போது எங்களது குழந்தைகள் சிறியவர்கள். அவர்களுக்கு விடுமுறை கிடைக்கும்போது அவர்களையும் ஸ்ரீதேவி தன்னுடன் படப்பிடிப்புக்கு அழைத்து வருவார். ஆனால் தயாரிப்பாளர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஸ்ரீதேவி அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார் என்றும் போனி கபூர் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





