மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை சுவாசிகா. பல ஆண்டுகளுக்கு முன்பே கோரிப்பாளையம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் அவர் நடித்திருந்தாலும் 2024ல் வெளியான லப்பர் பந்து படம்தான் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து மாமன் கருப்பு நூறு சாமி என பல படங்களில் சுவாசிகா பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சுவாசிகா கூறியதாவது, நான் சினிமாவில் பிரபலம் ஆகாத ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் படங்களில் வாய்ப்புக்காக பல முயற்சிகளை மேற்கொண்டேன். அப்போது சென்னைக்கு பட வாய்ப்புகள் தேடி வந்திருந்தேன்.
இயக்குனர்கள் ஏஆர் முருகதாஸ் லிங்குசாமி போன்ற பெரிய இயக்குனர்கள் இருப்பது எனக்கு தெரியும். ஆனால் அவர்களை நேரில் பார்த்தது இல்லை. அவர்களிடம் அறிமுகமும் கிடையாது. அப்போது சென்னையில் ஒருவர், சினிமா மேனேஜர் என்று என்னிடம் அறிமுகம் செய்துக்கொண்டார்.
இயக்குனர்கள் ஏஆர் முருகதாஸ் லிங்குசாமி போன்றவர்களுடன் நெருக்கமான பழக்கத்தில் இருப்பதாகவும் கூறினார். மேலும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் அவர்களை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். அதை நம்பி என்னுடைய அம்மாவின் நகைகளை அடகு வைத்து அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தேன்.
அப்புறம் நான் அவர் சொன்ன ஓட்டலுக்கு போய் பார்த்த போது அங்கு அவரும் இல்லை. அவர் சொன்ன இயக்குனர்களும் இல்லை. அந்த ஓட்டலுக்கும் ரூம் எடுத்து தங்கிய வாடகையை கூட அந்த நபர் கொடுக்காமல் தப்பிச் சென்றது தெரிய வந்தது. அப்போது என் அம்மா, இந்த இடம் நமக்கு சரியாக வராது. சினிமாவே வேண்டாம் என்று கூறினார்.
இந்த சம்பவத்தால் நானும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். இனிமேல் சினிமாவிலேயே நடிக்க வேண்டாம். எந்த பட வாய்ப்பையும் இனி தேடிப்போக வேண்டாம். சினிமாவையே விட்டு விலகி விடலாம் என்கிற அளவுக்கு வேதனையை எனக்கு தந்தது என்றும் நடிகை சுவாசிகா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





