சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஸ்வேதா. தன் மீதான தவறான குற்றச்சாட்டுகள் குறித்து அழுதபடி அவர் பேசிய வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது. ஸ்வேதாவின் கணவர் என்று சமூக வலைதளங்களில் பேசி வரும் ஆதி என்ற நபரால் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நடிகை ஸ்வேதா வேதனை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் தனது வாழ்க்கையில் நடந்த பல மோசமான சம்பவங்கள் குறித்து கண்ணீர் விட்டு கதறி அழுதபடி நடிகை ஸ்வேதா பேசியிருக்கிறார். அதில் ஸ்வேதா கூறியிருப்பதாவது, நான் ஆதி என்பவரை காதலித்தேன். அவரை பதிவு திருமணம் செய்துகொண்டேன். ஆனால் இது குடும்பத்தாரின் ஒப்புதலுடன் நடந்த திருமணம் அல்ல. அவருக்காக என் குடும்பம் பெற்றோர் நண்பர்கள் அனைவரையும் விட்டு வெளியேறினேன்.
காதலின் மீது வைத்திருந்த நம்பிக்கையால் வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். இது என்னுடைய இளமைப் பருவத்தில் நடந்தது. அந்த நேரத்தில் ஆதி கூறிய பல விஷயங்களை கண்மூடித்தனமாக நம்பி விட்டேன். அவன் பிசினஸ் செய்யப் போகிறேன் என்று சொல்லி என்னிடம் இருந்த நகைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டான்.
நான் கல்லூரியில் முதலாம் ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் போதே இதெல்லாம் நடந்தது. இந்த விவகாரம் வீட்டில் தெரிய வந்தபோது என் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதியை எச்சரித்தனர். அதனால் ஏற்பட்ட மோதல்களில் நானும் பாதிக்கப்பட்டேன். இருப்பினும் காதல் காரணமாக குடும்பத்தின் எச்சரிக்கையை நான் புறக்கணித்தேன். திருமணத்துக்கு பிறகும் வாழ்க்கை சீராக அமையவில்லை.
ஆதியின் வீட்டிலும் என்னை முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. பல நாட்கள் சாப்பிடாமல், தூங்காமல் அவதிப்பட்டோம். பின்னர் தான் அவர்கள் எங்களை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் ஆதி எந்த வேலைக்கும் செல்லவில்லை. அதன் பின்னர் சென்னை நகரத்திற்கு சென்று புதிய வாழ்க்கையை தொடங்க முயன்றோம். அதற்காக நானே எல்லா முயற்சிகளையும் செய்தேன். நான் பள்ளி காலத்திலிருந்து மாடலிங் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்தேன். சென்னை வந்த பிறகுதான் சீரியல் வாய்ப்பு கிடைத்தது.
சின்ன மருமகள் சீரியலில் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்து வருகிறேன். என்னுடைய உழைப்பில் கிடைத்த வருமானத்தை முழுவதுமாக ஆதிக்காக செலவழித்தேன். அவர் மீது இருந்த வழக்குகளுக்காக கூட கடன் வாங்கினேன். அவரை காதலித்ததுக்காக இன்று நான் கோர்ட் வரை அலைந்து திரிகிறேன். நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என்னால் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை. எனக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு ஆதி மட்டுமே காரணம் என்றும் ஸ்வேதா அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.





