தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரம் என்றால்,அதற்கு கச்சிதமான நடிகர் விஜயகுமார் தான். 80 மற்றும் 90களின் காலகட்டங்களில் வெளியான வெற்றி படங்களை புரட்டிப் பார்த்தால் அதில் நிச்சயம் விஜயகுமார் பங்களித்திருப்பார். ஊர் நாட்டாமை, தாய்மாமன், கதாநாயகனின் நண்பன் என ஏராளமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் பசு மரத்தாணி போல பதிந்தார். இப்படி இருக்க, விஜயகுமாரின் மகளான வனிதாவும் சினிமாவில் இறங்க ஆசைப்பட்டு, விஜய்யுடன் சந்திரலேகா திரைப்படம் மூலம் அறிமுகமானார். அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் பாடலில் இருவரும் சேர்ந்து நடனமாடிய காட்சிகள், இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்ந்து ராஜ்கிரணுக்கு ஜோடியான வனிதா, பின்னர் திரை உலகில் இருந்து விலகி திருமண வாழ்வில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்படி 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவருடன் வனிதாவுக்கு திருமணம் நடைபெற்றது. ஐந்து ஆண்டுகள் தாம்பத்திய வாழ்வில் சந்தோஷமாக இருந்த இந்த ஜோடி, திடீரென பிரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், அடுத்ததாக ராஜன் ஆனந்த் என்பவரை வனிதா திருமணம் செய்தார். இந்த ஜோடிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், மனக்கசப்பால் இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்து விஜயகுமாருடன் மோதலால் அவரது வீட்டை விட்டு வெளியேறிய வனிதா, தந்தை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். பின்னர் தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த வனிதாவுக்கு, நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இணைந்து காதலர்களாக ஊர் சுற்றிய நிலையில், திடீரென பிரேக் அப் செய்து கொண்டனர்.

தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா, அந்த வீட்டில் சொல்லி அடித்த கில்லி போல் அதகளப்படுத்தினார். வனிதாவின் ஒவ்வொரு பேச்சும் இணையத்தில் வைரலாக, பிக் பாஸ் இல்லத்தில் நாளுக்கு நாள் சரவெடி வெடித்தது. இதன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆகிய நடிகை வனிதா, அடுத்ததாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கொரோனா காலத்தில் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு, பலரும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்ய அதைக் கண்டு கொள்ளாத காதல் தம்பதியர் இல்லற வாழ்க்கையை இன்பமாக கழித்து வந்தனர். இருவரும் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றதை, கண்டு பலரும் அவர்களை கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் திடீரென பிரிந்தனர்.
பீட்டர் பாலின் அளவுக்கு அதிகமான குடியால், அவரை வனிதா வீட்டை விட்டு விரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்குப் பின்னர் பீட்டர் பால் உயிரழக்க, அவரின் பெயரைக் குறிப்பிடாமல் இரங்கல் பதிவை இட்டார் நடிகை வனிதா.இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த அவர், தான் மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக கூறி அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதாவது சினிமாவை தான் தற்போது அவர் திருமணம் செய்திருப்பதாகவும், தனது முழு கவனத்தையும் இனிமேல் அதன் மீது தான் வைக்கப் போவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதை அறிந்த ரசிகர்கள், நடிகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.





