மலையாள திரைப்பட கலைஞர்களுக்காக கடந்த 1994ம் ஆண்டில் அம்மா அமைப்பு தொடங்கப்பட்டது. மலையாள சினிமாவில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உரிமைகள் நலன் காத்தல் மற்றும் ஒற்றுமையை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அம்மா அமைப்பை பற்றிய பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு அம்மா அமைப்பின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்தில் சிக்கியது. இதன் தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் அந்த அமைப்பிலிருந்து விலகி வருகின்றனர். இந்நிலையில் அம்மா அமைப்பிலிருந்து விலகுவதாக நடிகைகள் ரேவதி மற்றும் பத்மபிரியா கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது, அம்மா அமைப்பைச் சுற்றியுள்ள மற்றொரு சர்ச்சையாக இதை பார்க்க கூடாது. எங்கள் ராஜினாமா அவசரத்திலோ அல்லது தனிப்பட்ட சம்பவத்தாலோ எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கடந்த 10 ஆண்டுகளாக பாதுகாப்பான பணி சூழல் கண்ணியம் பொறுப்பு கூறல் மற்றும் சமமான அணுகுமுறை ஆகியவற்றை மட்டுமே வலியுறுத்தி வந்தோம்.
ஆனால் அதற்கு பதிலாக மௌனமும் புறக்கணிப்பும் மட்டுமே கிடைத்தது. இருந்தாலும் மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டு வந்தோம். மேலும் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு சிலர் ராஜினாமா செய்தது கொள்கை ராதியான முடிவு அல்ல. பொறுப்பு கூறலில் இருந்து தப்பிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே அது இருந்தது.
அதிகார அமைப்புகள் தங்களை தற்காத்துக் கொள்ள புதிய வழிகளை தொடர்ந்து உருவாக்கிக் கொள்கின்றன. முகங்களும் நடைமுறைகளும் மாறினாலும் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் கட்டமைப்புகள் மாறவில்லை. மேலும் அனைத்து நடிகர்களின் கூட்டுக் குரலாக இருக்க வேண்டிய அம்மா அமைப்பு காலப்போக்கில் ஆணாதிக்கம் மற்றும் அதிகார அரசியலால் அதன் அடிப்படை நோக்கங்களை இழந்துவிட்டது.
எங்களின் வெளியேற்றம் தோல்வி அல்ல. அது எங்கள் சுயமரியாதையை பாதுகாக்கும் முடிவு. சமத்துவமான மலையாள திரைப்படத் துறைக்கான எங்கள் பயணம் தொடரும். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்த பொது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் மனமார்ந்த நன்றி என்று அதில் நடிகைகள் ரேவதி பத்மப்பிரியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





