நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் சென்சார் பிரச்னை காரணமாக கடந்த 9ம் தேதி வெளியாகவில்லை. பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்து காத்திருந்த தமிழ் சினிமா ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர். தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தும் படத்தை வெளியிட முடியவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்தை யு/ஏ சான்றிதழ் தந்து வெளியிட நீதிபதி பிடி ஆஷா உத்தரவிட்டும் சென்சார் போர்டு மேல் முறையீடு செய்த நிலையில் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிற 24ம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்து ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாமல் தடைபட்டதற்கு அரசியல் அழுத்தமே காரணமாக சொல்லப்படுகிறது. பாஜகவை தனது கொள்கை எதிரி என்று தவெக தலைவர் நடிகர் விஜய் பேசி வரும் நிலையில் இந்த விவகாரம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தணிக்கை வாரியம் சான்றிதழ் தராத நிலையில் விஜயின் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியே இந்த விவகாரத்துக்கு காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவராக நடிகை குஷ்பு, பாஜகவில் இருந்து விலகி இப்போது அதிமுகவில் உள்ள நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து நடிகை குஷ்பு கூறியதாவது, முதலில் மண்டையில் இருக்கும் மசாலாவை பயன்படுத்த வேண்டும். பாஜகவுக்கு திமுக எதிரி என்றால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இருந்தால் முதலில் பாஜக பராசக்தி படத்தை தான் சென்சார் மூலம் தடை செய்திருக்கும். முதலில் சென்சார் சான்றிதழ் வாங்காமல் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு மத்திய அரசின் மீது குற்றம் சொல்லக்கூடாது என்று குஷ்பு கூறியிருக்கிறார்.
நடன இயக்குனர் மற்றும் நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, பராசக்தி படத்தை பார்த்தேன். இந்த படத்தில் காங்கிரஸ்தான் இந்தியை திணித்தது என்பதை திமுகவே உறுதியாக சொல்கிறது. இந்த படம் காங்கிரஸ்க்கும் இண்டியா கூட்டணிக்கும் எதிரானதாக உள்ளது. இண்டியா கூட்டணிக்குள் திமுக இருக்க வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும் என்று நடிகை காயத்ரி ரகுராம் அதில் கூறியிருக்கிறார்.





