தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், கடந்த 20 ஆண்டுகளில் உச்சம் தொட்ட நடிகையாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருகிறார். இதுவரை 75 படங்களில் நயன்தாரா நடித்திருக்கிறரா்.
அவரது நடிப்பில் அடுத்து மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாக உள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்குகிறார். இதுதவிர கவினுடன் ஒரு படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் மண்ணாங்கட்டி என்ற படமும் அவரது நடிப்பில் விரைவில் வெளியாக உள்ளது.
நடிகை நயன்தாரா சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சில பிசினஸ்களிலும் தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறார். அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையும் அவர் செய்து வருகிறார். கடந்த ஆண்டில் பெமி 9 என்ற நிறுவனத்தை அவர் தொடங்கினார்.
அந்த நிறுவனம் துவங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து மதுரையில் இதற்கான சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பெமி 9 நிறுவனத்தின் முகவர்கள் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா, தன் கணவருடன் கலந்துக்கொண்டார்.
அவ்விழாவில் நடிகை நயன்தாரா பேசியதாவது, என்னுடைய வாழ்க்கையில் நான் நம்பக்கூடிய இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று தன்னம்பிக்கை இன்னொன்று சுயமரியாதை. இந்த இரண்டும் இருந்தால்தான் நம்மை கீழே இறக்க வேண்டும் என்று யார் நினைத்தாலும் வாழ்க்கையில் நாம் முன்னேறிக் கொண்டே இருப்போம்.
யார் நம்மை கீழ்த்தரமாக பேசினாலும் நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நாம் தினமும் நேர்மையாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் தன்னம்பிக்கையை மட்டும் கைவிட்டு விடக்கூடாது. தினமும் நமது பாதையில் ஓயாமல் உழைத்துக் கொண்டு நாம் சென்று கொண்டே இருந்தால், அது உங்களது வாழ்க்கையை பெரிய அளவில் உயர்த்தி விடும் என்று நயன்தாரா அந்த விழாவில் பேசியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





