நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த படம் கில்லி. இந்த படத்தை டைரக்டர் தரணி இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி, தாமு, கராத்தே ராஜா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படம்,மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக பெரிய அளவில் வெற்றி பெற்றது.
தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ஒக்கடு என்ற படத்தின் ரீமேக் தான் இந்த கில்லி. தமிழ் சினிமாவில் முதல் முறையாக, கில்லி 50 கோடி ரூபாய் வசூல் என்ற மிகப்பெரிய சாதனையை, 20 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்த்திக் காட்டியது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும், ஆக்சன் காட்சிகளும் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அவரது சினிமா வாழ்க்கையில் அமைந்தது.
அதேபோல் நடிகை திரிஷா – விஜய் ஜோடி கெமிஸ்ட்ரி கில்லி படத்தில் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி இருவரும் அடுத்தடுத்த படங்களில் ஜோடி சேர வாய்ப்பாகவும் அமைந்தது. இதன் பிறகுதான் திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ வரை அவர்கள் ஒன்றாக நடித்தனர். இப்போது கோட் படத்திலும், விஜயுடன் திரிஷா குத்தாட்டம் ஒன்றை போட்டிருக்கிறார்.
கில்லி படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள், ஆக்சன் காட்சிகள், பாடல் மற்றும் நடன காட்சிகள் சிறப்பாக இருந்தன. குறிப்பாக அப்படி போடு போடு, அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு, கொக்கர கொக்கரக்கோ, சூரத் தேங்கா அடுறா அடுறா போன்ற பாடல்கள் விஜய்க்கு செம மாஸ் ஆக அமைந்தன. குறிப்பாக கில்லி படத்தில் முத்துப்பாண்டி கேரக்டரில் ஹாய் செல்லம் ஐ லவ் யூ என டயலாக் பேசி, பிரகாஷ் நடிப்பில் அதகளம் செய்திருந்தார்.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின்பு, மீண்டும் கில்லி படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ப்ரீ புக்கிங் அடிப்படையில் பாக்ஸ் ஆபிஸில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் டிக்கெட் புக்கிங் ஆனது குறிப்பிடத்தக்கது. 20 ஆண்டுகளுக்கு பின் ரி ரிலீஸ் செய்யப்படும் ஒரு படம், ஒரு கோடி ரூபாய் என்ற அளவில் ப்ரீ புக்கிங் ஆனது மிகப்பெரிய அளவில் ஒரு சாதனையாக பேசப்பட்டது.
இந்நிலையில் நேற்று கில்லி படம் ரிலீஸ் ஆனது. புதிய தொழில்நுட்ப டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் ரிலீசான இந்த படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தியேட்டர்களில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என ரசிகர்கள் தூள் கிளப்பி வருகின்றனர். குடும்பம் குடும்பமாக தயேட்டர்களில் கில்லியை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கில்லி படம் முதல் நாளில் மட்டும் 7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.





