நடிகர் விஜயகாந்த் முதலில் விஜி என்று அழைக்கப்பட்டார். நடிப்பில் வளர்ந்து முன்னேறிய ஒரு காலகட்டத்தில் புரட்சிக்கலைஞர் என்றும் அழைக்கப்பட்டார். அதன்பின் தனது 100வது படமான கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்தார். அந்த படம் தந்த பட்டம்தான் கேப்டன். அன்று முதல் இந்த நிமிடம் வரை கேப்டன் என்றுதான் ரசிகர்களால் அவர் அன்போடு அழைக்கப்படுகிறார்.
விஜயகாந்த் மற்ற நடிகர்களை விட ராசிக்காரர் என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் பலரும் சொல்வதுண்டு. ஏனெனில் அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், அவருடன் நடிக்கும் நடிகர், நடிகையருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரும். பெரிய பெரிய வெற்றிகள் தேடிவரும். பெரிய அளவில் லாபமும் கிடைக்கும். அந்தளவுக்கு ராசிக்காரர் என்ற பெயரும் விஜயகாந்துக்கு உண்டு.
அதே போல் ரஜினியின் 100வது படம் ஸ்ரீ ராகவேந்திரர், கமல் நடித்த 100வது படம் ராஜபார்வை, பிரபு நடித்த 100வது படம் ராஜகுமாரன் என ஸ்டார் நடிகர்களான அவர்களது 100வது படங்கள், தோல்வியடைந்த நிலையில், விஜயகாந்த் நடித்த 100வது படம் கேப்டன் பிரபாகரன் மட்டும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அவரது சினிமா பயணத்தில் அது சிகரமாக அந்த படம் இருந்தது.
சினிமாவில் வெற்றிப்படங்களை கொடுத்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் தேசிய திராவிட முன்னேற்ற கழகம் (தேமுதிக) என்ற அரசியல் கட்சியை துவக்கி, மக்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பை பெற்றார். கட்சி துவங்கி இரண்டாவது சட்டசபை தேர்தலிலேயே எதிர்கட்சி தலைவராக சட்டசபையில் அமர்ந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் உடல் நலம் பாதித்து வீட்டிலேயே முழுநேர ஓய்வெடுக்கும் நிலை விஜயகாந்துக்கு ஏற்பட்டது. பல ஆண்டுகளாக உடல் நல பாதிப்புடன் மருத்துவ சிகிச்சைகளை தொடர்ந்து பெற்று வருகிறார்.
கடந்த சில வாரங்களுக்க முன் திடீரென மூச்சுத்திணறல், சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுடன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்ப்பட்டார். மிகவும் கிரிக்கிட்டிகல் ஸ்டேஜில் உள்ளதாக அவரை பற்றி வந்த தகவல்களால் ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அவருக்காக கோவில்களில் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை நிர்வாகம், விஜயகாந்த் பூரண குணமடைந்துவிட்டார். இன்று ( 11ம் தேதி) வீடு திரும்புகிறார் என அறிக்கை வெளியிட்ட நிலையில், விஜயகாந்த் அவரது வீட்டுக்கு திரும்பியுள்ளார். இந்த தகவலை அறிந்த கேப்டன் ரசிகர்கள் ஆனந்த கண்ணீர் சிந்துகின்றனர். விஜயகாந்த் பூரண நலம் வேண்டி ரசிகர்கள் பலரும் காத்திருந்த நிலையில் இந்த தகவல் அவர்களுக்கு நிம்மதி, மகிழ்ச்சியை அளித்துள்ளது.





