தமிழ் சினிமாவில் எப்போதுமே ஹீரோக்களை மையப்படுத்திய கதைகளே அதிகமாக வரும். கதையில் வரும் நாயகன் ஹீரோயிசம் காட்டினால்தான் அந்த படமே வேற லெவலில் பேசப்படும், தமிழ் ரஜினிகாந்த் போல, தெலுங்கில் சிரஞ்சீவி, பாலய்யா போல, கன்னடத்தில் ராஜ்குமார், சிவராஜ் குமார் போல, மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி போல ஹீரோயிசம் காட்டும் நடிகர்களே இங்கு அதிகம்.
சில நேரங்களில் ஹீரோயிசம் தாண்டி சில நல்ல படங்களிலும் அத்தகைய ஸ்டார் நடிகர்கள் ரிஸ்க் எடுத்து நடிப்பது உண்டு. அப்போதுதான் அவர்கள், ஹீரோயிசம் காட்டியதன் விளைவை அறிந்துக்கொள்வார்கள். தமிழில் வீரா படத்தில் ஹார்மோனிய பெட்டியும், தோளில் துண்டுமாக நடித்த ரஜினியை பார்த்து, தியேட்டரை விட்டு தெறித்து ஓடிய ரசிகர்கள் அதிகம்.
ஹீரோயிசம் காட்டிய நடிகர்கள், அதே கெத்தில் கடைசி வரை வண்டியை ஓட்டி விட்டால் பிரச்னை இல்லை. இடையில் ஏதேனும் வித்யாசம் செய்தால், நடிகரின் நேரம் நன்றாக இருந்தால், கதையும் ரசிகர்களுக்கு பிடித்து விட்டால் தப்பித்தார்கள். இல்லை என்றால் முன்னாலும் போக முடியாமல், பின்னாலும் வர முடியாமல் சிக்கிக்கொள்கின்றனர். அந்த வகையில் இப்போதைய நடிகர்களில் விஜய் சேதுபதியை இந்த வகையில் சொல்லலாம்.
ஹீரோயிசம் காட்டும் நடிகர்களுக்காக தான் படத்தின் டைட்டிலே அவர்களது பெயரில் வைக்கப்படுகிறது. பாட்ஷா, முத்து, படையப்பா, அண்ணாத்த, ஜெயிலர், வேட்டையன், விக்ரம், லியோ, இந்தியன் என கதாநாயகன் பெயரை மையப்படுத்தி படத்தின் டைட்டிலை வைக்க காரணமே, அவர்களது ஹீரோயிசத்தை காட்டியே படத்தை, பில்டப் பண்ணியே ஓட்டி விடலாம் என்பதுதான் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் திட்டமாக இருக்கிறது.
அந்த வகையில், நடிகைகள் நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இரண்டு நடிகைகளும் ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்ட் படங்களில் நடித்தனர். இதில் சில படங்கள் வெற்றி பெற்றன. சில படங்கள் மாபெரும் பிளாப் படங்களாக போய் விட்டன. அந்த வகையில் அன்னபூரணி, ஓ2, கனெக்ட், நெற்றிக்கண் உள்ளிட்ட சில படங்கள் ஓடாததால் நயன்தாரா, இனி கதைநாயகி படங்கள் வேண்டாம் என முடிவு செய்திருக்கிறார்.
அதே போல் தனது கதை நாயகி படங்கள் தோல்வி அடைந்ததால், இனிமே அத்தகைய ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடிக்க வேண்டாம் என ஐஸ்வர்யா ராஜேஷூம் முடிவு செய்திருந்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் டெல்லி பாபு தயாரிக்கும் புதுமுக இயக்குநர் டைரக்டர் செய்யும், டெல்லி பாபு அக்கா மகன் ஹீரோவாக நடிக்கும் வளையம் என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இதுவும் கதை நாயகி படம்தான். டைம் டிராவலர் கதை எனக் கூறப்படுகிறது. கதை மிகவும் அட்டகாசமாக இருந்ததால், ஐஸ்வர்யா ராஜேஷ், தனது முடிவை இந்த படத்துக்காக மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.





