சமீபத்தில் சென்னையை சேர்ந்த தூய்மை பணியாளர் பத்மா என்பவர், தி நகர் பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு ரோட்டோரத்தில் கிடந்த குப்பைக்குள் இருந்த ஒரு கவரில் 45 சவரன் நகைகளை கண்டெடுத்தார். உடனடியாக அதை அவர் அப்பகுதியில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று ஒப்படைத்தார்.
தூய்மை பணியாளர் பத்மாவின் இந்த நேர்மையான செயல் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களின் கவனம் பெற்றது. அவரை பலரும் பாராட்டிய நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டி ரூ. 1 லட்சத்துக்காக காசோலை வழங்கினார்.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்துக்கு பத்மா மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து பத்மாவின் நேர்மையான செயலை பாராட்டினார். மேலும் தங்க செயின் பரிசளித்தார். நேர்மை என்பதே மலிவாகி விட்ட இன்றைய சூழலில் ஏழ்மையான தூய்மை பணியாளர் பத்மாவின் இந்த செயல் பெரிய அளவில் பாராட்டை பெற்றுள்ளது.
இந்நிலையில் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, தங்கத்தின் மதிப்பு ஏற ஏற மனிதத்தின் மரியாதை குறைந்து கொண்டே போய் ஒரு கிராம் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கும் போது லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகி விடும்.
வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள் குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து அந்த ஒரு செயலின் மூலம் உலக மகா உன்னத மனுசியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
என்னை சீப் கெஸ்ட் ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு நான் வெறும்கெஸ்ட் ஆகவும் சீப் ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று பாதணி அணிவித்து பாத பூஜை செய்து புடவை போர்த்தி உலக அழகி என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன் என்று அந்த பதிவில் நடிகர் பார்த்திபன் கூறியிருக்கிறார்.





