தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. இதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளியான அப்படமும் தோல்வியை சந்தித்தது. அவர் இப்போது லால் சலாம் படத்தை இயக்கியிருக்கிறார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்திருக்கின்றனர். மேலும் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் கேமியோ ரோல் செய்திருக்கிறார். இவர்கள் தவிர கபில்தேவும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவிருக்கின்றன.
இதற்கிடையே தனுஷுடன் சுமூகமாக போய்க்கொண்டிருந்த ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கை பிரிவில் முடிந்தது. இருவரும் வெவ்வேறு பாதையில் செல்வதாக 2021-2022 வாக்கில் அறிவித்தனர். பிரிவதாக அறிவித்தாலும் இதுவரை சட்டப்பூர்வமாக விவாகரத்து எதையும் அவர்கள் பெறவில்லை. எனவே மீண்டும் இரண்டு பேரும் இணைவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில் ஜெயிலர், லால் சலாம் ஷூட்டிங்கை முடித்த ரஜினிகாந்த் குட்டி ரெஸ்ட் எடுப்பதற்காக மாலத்தீவுகளுக்கு சென்றார். ஆனால் பயில்வான் ரங்கநாதனோ ஒரு வீடியோவில், ‘லால் சலாம் படத்தில் தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த ஒருவரை ஐஸ்வர்யா காதலித்தார். அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக ரஜினியிடம் கூறினார். அதற்கு ரஜினி கடும் கோபமடைந்து ஐஸ்வர்யாவின் முகத்தை பார்க்க பிடிக்கமால்தான் மாலத்தீவுகளுக்கு சென்றார்’ என வழக்கம்போல் பற்ற வைத்தார்.
அதுமட்டுமின்றி மாலத்தீவில் ரஜினி ஒரு சீக்ரெட் மீட்டிங்கை ஏற்பாடு செய்து தனுஷ், ஐஸ்வர்யாவை வரவழைத்து பிரச்னையை பேசி முடிக்கலாம் என திட்டம் தீட்டியிருந்தார். ஆனால் இருவருமே செல்லவில்லை. இதன் காரணமாக ரஜினி ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார் என்றும் ஒரு வதந்தி தகவலாக பரவியது. இப்படி ரஜினியின் மாலத்தீவு பயணத்தையும், ஐஸ்வர்யாவின் திருமண முறிவு விவகாரத்தை முடிச்சு போட்டு பலரும் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். அதுவும் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவின்போது அந்தப் புகைப்படத்தை எடுத்திருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா குறித்தும், ரஜினி குடும்பம் குறித்தும் அவதூறு கிளப்பிய பயில்வான் ரங்கநாதனுக்கும் மற்றவர்களுக்கும் அந்தப் புகைப்படம் மூலம் ஐஸ்வர்யா தரமான பதிலடியை கொடுத்துவிட்டார் என்று கூறிவருகின்றனர். மேலும் அந்தப் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.





