தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நாளைய இயக்குனர் நிகழ்ச்சிதான் இப்போது இருக்கும் பலரது இயக்குனர்களுக்கும் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. நளன் குமாரசாமி கார்த்திக் சுப்புராஜ் வரிசையில் அஜய் ஞானமுத்துவும் இந்த பின்புலத்தில் இருந்து தான் வந்தவர். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் பாராட்டைப் பெற்ற அஜய் ஞானமுத்து, ஏ ஆர் முருகதாஸின் உதவியாளராக பணிபுரிந்தார்.
தொடர்ந்து ஏழாம் அறிவு மற்றும் துப்பாக்கி ஆகிய திரைப்படங்களில் பணிபுரிந்த அவர், தனது முதல் திரைப்படமாக டிமான்டி காலனியை எடுத்தார். அருள்நிதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அந்த சமயத்தில் ஹாரர் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வரிசையாக வந்து கொண்டிருந்தபோது, டிமான்டி காலனி மட்டும் தனித்துவம் பெற்று சொல்லி அடித்த வெற்றியை பெற்றது. இந்த திரைப்படம் கொடுத்த வெற்றியால், பலருக்கு கவனத்தையும் ஈர்த்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
தொடர்ந்து அவர் நயன்தாராவை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து இமைக்கா நொடிகள் திரைப்படத்தை இயக்கினார். இதில் கேமியோ ரோலில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார். இந்தத் திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. படத்தின் நீளம் மட்டும்தான் மைனசாக பார்க்கப்பட்ட நிலையில், அது வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
பிறகு விக்ரமை வைத்து கோப்ரா திரைப்படத்தை இயக்கினார் அஜய் ஞானமுத்து. பல்வேறு கெட்டப்களில் விக்ரம் நடித்த இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படியான சூழலில் தான் அந்த தோல்வியிலிருந்து மீள்வதற்காக டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை அஜய் ஞானமுத்து எடுத்தார். இதிலும் அருள்நிதி பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. திரையரங்குகளில் அதிக அளவு வசூல் குவித்தது. இப்படியான சூழலில் டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இதனை படம் பிடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதிலும் அருள் நிதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ப்ரீ ப்ரொடக்சன் பணிகளும் தொடங்கி விட்டதாக பேசிக் கொள்கிறார்கள்.





