கடந்த 2023ம் ஆண்டில் அக்டோபர் மாதம் 4ம் தேதி அஜீத்குமார் நடிப்பில் விடாமுயற்சி படப்பிடிப்பு, அஜர்பைஜானில் துவங்கியது. இப்போது 14 மாதங்களுக்கு பிறகு வருகிற 2025ம் ஆண்டில் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று டீசர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அஜீத்குமார் நடித்த துணிவு படத்துக்கு பின், சரியாக 2 ஆண்டுகள் கழித்து விடாமுயற்சி படம் ரிலீஸாகிறது.
ஏனெனில் துணிவு படம் கடந்த 2023ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்குதான் வெளியானது. அதே நாளில் விஜய் நடித்த வாரிசு படமும் வெளியானது. ஆனால் அதற்கு பின் விஜய் நடித்த லியோ மற்றும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என 2 படங்கள் வெளியாகி விட்டன. இப்போது தளபதி 69 படப்பிடிப்பும் விறுவிறுப்பாக போகும் நிலையில், அஜீத்குமாரின் அடுத்த படமே வரும் பொங்கலுக்குதான் வெளியாக உள்ளது.
ஆனால் இந்த படம் பொங்கலுக்கு வெளியாக முக்கிய காரணம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம்தான். ஏனெனில் அந்த படத்தின் வௌியீடு உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம், வரும் பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகாத பட்சத்தில் அந்த படத்தை நாங்கள் வாங்க மாட்டோம் என கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டது.
அதற்கு பிறகுதான் பொங்கல் ரிலீஸ் என்ற விடாமுயற்சி பட டீசரை வெளியிட்டு படக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆனால் 14 மாதங்கள் ஆன போதிலும் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி, இன்னும் மீதமுள்ள பாடல் காட்சிகளை எடுக்க 25 நாட்கள் வேண்டும் என கேட்டிருக்கிறார். இதைக்கேட்டு படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்னும் 25 நாட்கள் என்றால் பொங்கலுக்கு படம் வராதே எனவும் குழம்பியுள்ளனர்.
ஆனால் நடிகர் அஜீத்குமார், இனிமேலும் 25 நாட்கள் தர முடியாது. குறைந்த பட்சம் 6 நாட்கள், அதிக பட்சம் 10 நாட்கள் மட்டுமே தர முடியும். அதற்குள் தேவையான காட்சிகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கண்டிஷனாக மகிழ் திருமேனியிடம் கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் படக்குழுவினர் தாய்லாந்து சென்று அங்கு பாடல் காட்சியை படமாக்க உள்ளனர்.
நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் நெருக்கடி தராத பட்சத்தில் இன்னும் பல நாட்கள் மகிழ் திருமேனி படப்பிடிப்பை தாமதம் செய்து, விடாமுயற்சி என்றாலே அது பல ஆண்டுகளாக படப்பிடிப்பில் உள்ள படம் என்று கிண்டலடிக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தியிருப்பார். ஆனால் பொங்கல்தான் இறுதி வாய்ப்பு என்று நெருக்கடி தந்த நெட்பிளிக்ஸ் தளம்தான், விடாமுயற்சி படம் ரிலீஸாவதற்கே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.





