நடப்பு 2025ம் ஆண்டின் கடைசியில் டிசம்பர் மாதத்துக்கு வந்து விட்டோம். இன்னும் 10 நாட்களில் 2026 புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டை வரவேற்க உலக மக்கள் அனைவரும் தயாராகி வரும் நிலையில், தமிழ் சினிமாவில் இதுவரை கிட்டத்தட்ட 300 படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் இதில் சூப்பர் ஹிட் படங்கள் என்றால் 10க்கும் குறைவாகவே உள்ளன.
மதகஜ ராஜா குட் பேட் அக்லி மாமன் டூரிஸ்ட் பேமிலி குடும்பஸ்தன் குட் பேட் அக்லி தலைவன் தலைவி கூலி என சில படங்களை தான் சொல்ல முடியும். அதிலும் வசூல் ரீதியாக வெற்றிப் படங்களாக இருந்த கூலி குட் பேட் அக்லி தலைவன் தலைவி போன்ற படங்கள் விமர்சன ரீதியாக மக்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை.
இதில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் அஜீத்குமார் தனுஷ் விஜய் சேதுபதி என பல முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாகின. ஆனால் இந்த ஆண்டில் நடிகர்கள் விஜய் கார்த்தி போன்ற ஒரு சிலர் படங்களின் வெளியாகவில்லை. ரெட்ரோ படத்துக்கு பிறகு சூர்யா நடித்த கருப்பு படமும் ரிலீஸாகாமல் உள்ளது.
இந்த ஆண்டில் ரிலீஸ் ஆன படங்களின் ரிலீஸ்க்கு முன்பாக டிரெய்லர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ஆர்வத்தை தூண்டியது. அதில் அதிக பார்வைகளை பெற்ற படங்களின் டிரெய்லர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் உச்சநட்சத்திரங்கள் நடித்த படங்களின் டிரெய்லர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நடிகர் அஜீத் குமார் நடித்த குட் பேட் அக்லி படம் டிரெய்லர் தான் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. யூடியூப்பில் 3.9 கோடி பார்வையாளர்களை பெற்று குட்பேட் அக்லி படம் டிரெய்லர் முதலிடத்துக்கு முந்தி விட்டது. அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த தக்லைஃப் படம் டிரெய்லர் 3.5 கோடி பார்வைகளை பெற்று 2ம் இடம் பிடித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தின் டிரெய்லர் 2.8 கோடி பார்வைகளை பெற்று 3ம் இடத்தில் உள்ளது. நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படம் டிரெய்லர் 2.4 கோடி பார்வைகளுடன் 4ம் இடம், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் 2.1 பார்வைகளுடன் 5ம் இடத்தையும் பிடித்துள்ளன.





