துணிவு படத்துக்கு பிறகு ஓராண்டுக்கு மேலாகியும் அஜீத்குமார் நடித்த படம் எதுவும் வராதது அவரது ரசிகர்களை மிகவும் ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு அஜீத் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு என 2 படங்களும் ஒன்றாக தான் ரிலீஸ் ஆகின. இரண்டுமே ஓரளவு நன்றாக ஓடியது.
அதன்பிறகு விஜய் நடிப்பில் லியோ படம், கடந்த அக்டோபரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று, வசூலை குவித்தது. விமர்சன ரீதியாக தோல்விப்படமாக இருந்தாலும், வசூலில் வெற்றி பெற்ற படமாக இருந்தது. அதன்பிறகு விஜய் நடித்து வரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம், வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
ஆனால் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படம், அக்டோபரில் துவங்கி இன்னும் முடியவில்லை. நான்கு மாதங்களாக அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடத்தியும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கின்றன. குறிப்பாக அஜீத்குமார்- திரிஷா நடிக்க வேண்டிய காட்சிகள் நிறைய இருப்பதாக தெரிகிறது.
விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கியது முதல் பல்வேறு இயற்கை சீற்றங்களால் அஜர்பைஜானில் அடிக்கடி படப்பிடிப்பு தடைபட்டது. இதனால் படக்குழு சென்னைக்கு வந்து வாரக்கணக்கில் தங்கி ஓய்வெடுத்து விட்டு திரும்பி சென்றது. ஏனெனில் அஜர்பைஜானில் படப்பிடிப்பின்றி சும்மா இருந்தாலும் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கு ஏகப்பட்ட செலவு அதிகரித்தது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு, திரிஷா மிக பிஸியான நடிகையாகி விட்டார். தெலுங்கில் 2, மலையாளத்தில் 3 என 5 படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அத்துடன் மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்திலும் இப்போது நடித்துக்கொண்டு இருக்கிறார். ஏற்கனவே, விடாமுயற்சி படத்துக்காக அவர் கொடுத்த கால்ஷீட்டில் படப்பிடிப்பு நடக்காததால், மீண்டும் அவர் நடிக்க தேதி தருவதில் சிக்கல் நீடிக்கிறது.
ஏனெனில் அந்த தேதிகளை ஏற்கனவே கமிட் ஆன தெலுங்கு, மலையாளம் படங்களுக்கு கொடுத்திருக்கிறார். அதனால் திரிஷா வருகைக்காக அஜீத்குமார் காத்திருக்கிறார். படப்பிடிப்பும் தள்ளிப் போய்ககொண்டே இருக்கிறது. இதில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தின் துவக்கம், மார்ச் 1ல் துவங்குவதாக இருந்தது. அதுவும் தடைபட்டுள்ளது. அந்த படத்துக்காக கால்ஷீட் தந்த நடிகர், நடிகைகளுக்கும் இப்போது, படப்பிடிப்பு துவங்காததால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்படி விடாமல் துரத்தும் பிரச்னைகளால் விடாமுயற்சி படம் ஷூட்டிங் துவங்காமல் தத்தளிக்கிறது.





