தமிழ் சினிமாவில் நடிகர் விஜய், அஜீத்குமார் இருவரும்தான் இப்போது சமகாலத்தில் இருக்கும் கடும் போட்டியாளர்கள். ரஜினி, கமல் இருந்தாலும் அவரவர் பாதையில் சென்று உச்சங்களை தொட்டு விட்டனர். புகழில் உச்சம் தொட்ட இருவருமே போட்டியாளர்களாக தங்களை கருதுவதில்லை. ரசிகர்களும் அதே மனநிலைக்கு வந்துவிட்டனர்.
ஆனால் விஜய் – அஜீத் நண்பர்களாக இருந்தாலும் அவர்களது ரசிகர்கள் இடையே இன்னும் போட்டி மனப்பான்மை நீடிக்கிறது. அதனால் அடிக்கடி சமூக வலைதளங்களில் இரு தரப்பு ரசிகர்களும் காரசாரமாக சண்டையிட்டுக் கொள்கின்றனர். லியோ பட விழாவில் பேசிய நடிகர் விஜய், இதெல்லாம் வேண்டாம். இந்த வயசுல இந்த கோபம் ஆகாது. நமக்கு வேற வேலை இருக்குது என்று சூசகமாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா புரடக்சன் தயாரிப்பில், 10 மொழிகளில் வௌியாகும் படத்தை இயக்க உள்ளார். இதற்கான பட பூஜை போடப்பட்ட நிலையில், கதை, திரைக்கதைக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஜேசன் சஞ்சய் பிஸியாக இருந்து வருகிறார்.
இதற்கிடையே இந்த படத்துக்கான பிஆர்ஓவாக அனுபவம் வாய்ந்த ஒருவர் வேண்டும் என்பதால், நடிகர் அஜீத்குமாரின் மேனேஜராக உள்ள சுரேஷ் சந்திராவிற்கு அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து தயங்கிய சுரேஷ் சந்திரா, அஜீத்குமாரிடம் விஷயத்தை கூறியுள்ளார்.
இதைக்கேட்ட அஜீத்குமார், தாராளமாக போய் பண்ணுங்க என சந்தோஷமாக கூறியிருக்கிறார். இதையடுத்து, ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் பிஆர்ஓவாக சுரேஷ் சந்திரா நியமனம் செய்யப்பட உள்ளார். அத்துடன் சுரேஷ் சந்திராவிடம், ஜேசன் சஞ்சய் போன் நம்பர் வாங்கி ஜேசன் சஞ்சயிடம் பேசிய அஜீத்குமார், வாழ்த்துகள் சொல்லி இருக்கிறார்.
தொழில் போட்டியாக கருதும் விஜய் மகனுக்கு, அஜீத்குமார் தனது மேனேஜரை பிஆர்ஓவாக அனுப்பியது, அவரே போன் செய்து வாழ்த்துகள் சொன்னது போன்ற விஷயங்கள், அஜீத்குமார் குறித்த இமேஜை எக்ஸாபிளிஸ் செய்துள்ளதால், சமூக வலைதளங்களில் இது தற்போது வைரலாகி வருகிறது.





