தமிழ் சினிமாவில் யாருடைய பின்புலமும், ஆதரவும் இல்லாமல் நடிக்க வந்தவர் அஜீத்குமார். இன்று டாப் ஸ்டார் நடிகர்களில் நான்கு பேரில் ஒருவராக இருக்கிறார். அவரது படங்கள் வெளியாகும் நாட்களை தீபாவளி, பொங்கல் போல ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இப்போது அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடித்துக்கொண்டு இருக்கிறார் அஜீத்குமார்.
அஜீத்குமாரை பொருத்த வரை, பெரிய ஸ்டரான பிறகு குறிப்பிட்ட கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் வரை கூட நடிப்புக்கு இடைவெளி விடுகிறார். கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றில் தீவிர ஈடுபாடு காட்டுகிறார். சில ஆண்டுகளாக பைக்கில் வோர்ல்டு டூர் செல்வதில் அஜீத் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த காலத்தில் ஆண்டுக்கு 4 படங்கள் வரை கூட ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு ஒரு படம், இரண்டு படம் மட்டுமே நடித்தார். பாட்சா போன்ற படங்களில் நடித்து மாஸ் ஹீரோ ஆன பிறகு, இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படம் என்ற ரீதியில் அவர் படம் ரிலீஸ் ஆனது.
இதற்கிடையே அவருக்கு திடீரென சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, வெளிநாட்டில் தீவிர சிகிச்சை பெற்று திரும்பினார். அதன்பிறகு அரசியலுக்கு வருவதாகவும் ஒரு கட்டத்தில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து பேசினார். ஆனால் வரவில்லை. ஆனால் பேட்ட படத்தில் இருந்து தொடர்ந்து காலா, கபாலி, ஜெயிலர் வரை படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
நடிகர் விஜயை பொருத்தவரை எப்போதும் அவர் படங்களில் மிக தீவிரமாக, பிஸியாக நடித்துக்கொண்டே இருக்கிறார். அவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் சினிமாவில் இருந்து இடைவெளி விட்டதே கிடையாது. வெற்றியோ, தோல்வியோ அடுத்தடுத்த படங்களில் நடிப்பதே விஜய் வழக்கமாக இருந்து வருகிறது.
முழு நேரமும் நடிப்பு, அடுத்தடுத்த படங்கள் என்ற பார்மூலாவில் இருப்பதால் தொடர்ந்து ரஜினி, விஜய் படங்கள் வெளியாகின்றன. வசூலும் குவிகிறது. சம்பளமும் அதிகரிக்கிறது. அவர்கள் அடிக்கடி வைரலாகி புகழ் பெறுகின்றனர். அதே பார்மூலாவை இப்போது அஜீத்குமாரும் கையில் எடுத்துவிட்டார். விடாமுயற்சி படத்துக்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன், வெற்றிமாறன் படங்களில் நடிக்க இப்போதே கமிட் ஆகி விட்டார். இனி தனது ரசிகர்களை ஏமாற்றாத வகையில் தொடர்ந்து படங்களில் நடிப்பது. வெற்றி நாயகனாக உச்சம் தொடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ஏகே.





