நடிகர் விஜய் இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். தளபதி 69 என தற்காலிக பெயர் வைக்கப்பட்ட இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். கங்குவா பட வில்லன் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். எச் வினோத் இயக்கும் இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இது அந்நிறுவனத்துக்கு முதல் படமாகவும், விஜய்க்கு கடைசி படமாகவும் உள்ளது.
தளபதி 69 படத்தில் பிரேமலு பட நாயகி மமிதா பைஜூ, பிரியாமணி மற்றும் பிரகாஷ் ராஜ், கவுதம் மேனன், நரேன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பையனூரில் பாடல் காட்சியுடன் கடந்த 5ம் தேதி படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வருகிற 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விசாலை கிராமத்தில் முதல் அரசியல் மாநாடு, கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. பிரமாண்டமான மாநாடு பந்தல், மேடை அமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் கட்சியின் கூட்டத்தின் பேசிய தவெக பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த், மாநாட்டுக்கு செல்ல ஒரு ஊழியர் தன் நிறுவன முதலாளியிடம் 26, 27ம் தேதிகளில் லீவ் கேட்டதாகவும், அதற்கு மறுத்த முதலாளியிடம் உன் சம்பளமும் வேணாம், போனஸூம் வேண்டாம், என் தலைவனை பார்க்க நான் போயே ஆகணும், என் தலைவன் வரச் சொல்லிட்டான், நான் போகணும் என்று பேசியதாக, புஸ்லி ஆனந்த் குறிப்பிட்டு பேசினார்.
இது தற்போது வைரலாகி வரும் நிலையில், மூத்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி இதுகுறித்து கூறியிருப்பதாவது, நல்ல வேலை கிடைப்பதும் அதை தக்க வைத்துக்கொள்வதும் இந்த காலத்தில் பெரிய போராட்டமாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், வேலை வேண்டாம் என்று கூறி விட்டாவது மாநாட்டுக்கு வந்து விடுங்கள் என்கிற பாணியில் மிகவும் அபத்தமாக புஸ்லி ஆனந்த் பேசியிருக்கிறார்.
விஜய் கட்சி துவங்கியுள்ள நிலையில் இன்னும் அரசியலுக்கு உண்டான பக்குவமே இல்லாமல், ரசிகர் மன்றம் போன்ற மனநிலையில் அவர் கட்சியினர் மத்தியில் பேசியிருக்கிறார். இந்த பொறுப்பற்ற பேச்சு விஜயின் கவனத்துக்கு சென்றதா, அவர் புஸ்லி ஆனந்தை கண்டித்தாரா என்று தெரியவில்லை. நன்றாக படியுங்கள், நல்ல வேலைக்கு செல்லுங்கள் என விஜய், கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிக்கொண்டு இருக்கும் போது, அவரது கட்சி நிர்வாகியே இப்படி பேசுவது முரண்பட்டதாக உள்ளது, என்று கூறியிருக்கிறார்.





