நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். இதுபோக, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக தகவல் வெளியாகி இருந்தாலும் அது குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. முழுக்க முழுக்க, அஜர்பைஜான் நாட்டில் இதன் சூட்டிங் நடத்தப்பட்டது. ஆக்சன் திரில்லர் திரைப்படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவரான மகிழ் திருமேனி, இந்தப் படத்திலும் அதனையே பின்பற்றி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தில் 70% படப்பிடிப்பு பணிகள் முடிவுற்றதாகவும், மீதமுள்ள பணிகள் வெளிநாடுகள் மற்றும் புனே ஆகிய பகுதிகளில் சூட்டிங் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
கிட்டத்தட்ட இது திரைத்துறை வட்டாரத்தில் உறுதி செய்யப்பட்டது. படத்தை தெலுங்கில் உள்ள மைத்திரி தயாரிப்பு நிறுவனம் எடுக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 80களில் நடைபெறும் கதையாக இது உருவாக இருப்பதாகவும், இதற்கான பணிகளில் ஆதிக் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகின.
படத்திற்கான பிரீ ப்ரொடெக்சன் பணிகள் தொடங்கி இருப்பதாகவே கூறப்பட்டது. இப்படியான சூழலில் திடீரென படத்தின் இயக்குனர் மாறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எச் வினோத், மகிழ் திருமேனி படங்களில் நடித்திருக்கும் அஜித் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்திலேயே நடிக்க விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக அவருக்கே கால் சீட் கொடுக்க அஜித் முடிவு செய்துள்ளாராம். தற்போது சிறுத்தை சிவா சூர்யாவின் கங்குவா திரைப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனை முடித்த பின்பு அவர் அஜித் படத்தை இயக்குவார் என்று தெரிகிறது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எதிர்பாராத இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.





