நடிகர் அஜீத்குமார் நடித்துவரும் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி டைரக்ட் செய்கிறார். லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படம் துவங்கியதில் இருந்தே சில பிரச்னைகளை சந்தித்து வருகிறது. படப்பிடிப்பு துவங்கிய சில வாரங்களில் படத்தில் கலை இயக்குநராக பணிபுரிந்த மிலன் இறந்தார். அஜீத்குமாரின் நெருங்கிய நண்பரான இவரது மறைவு படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்தது. எனினும் சில நாட்களுக்கு பின் படப்பிடிப்பை தொடர்ந்தனர்.
அதன்பிறகு மணல்புயல் காரணமாக தொடர்ந்து ஷூட்டிங்கை நடத்த முடியவில்லை. இதையடுத்து ஒருவாரம் படப்பிடிப்புக்கு இடைவெளி விடப்பட்டது. அந்த ஒருவாரத்தில் படக்குழு சென்னை திரும்பியது. பிறகு, சில தினங்கள் கழித்து மீண்டும் அஜர்பைஜான் புறப்பட்டுச் சென்றது.
இந்த சூழலில் தொழிலாளர்களின் விடுமுறை பிரச்னை எழுந்தது. அதாவது வாரத்தில் 5 நாள் பணி, 2 நாள் விடுமுறை என்பதுதான் அஜர்பைஜானில் உள்ள வழக்கம். அந்த சட்டப்படி தான் அங்கு தொழிலாளர்கள் பணிசெய்கின்றனர். அதனால் படப்பிடிப்புக்குழு தொடர்ந்து விடுமுறை விடாமல் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என பிரச்னை எழுந்தது. பிறகு 7 நாட்களுக்கு ஒரு நாள் விடுப்பு என்ற முடிவுக்கு படக்குழு வந்ததால், பிரச்னை சுமூகமாக தீர்ந்துள்ளது.
இப்போது 2வது கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் இருக்கிறார். ஆனால் முதல்கட்ட படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா இருந்தார். இந்த திடீர் மாற்றத்துக்கான காரணம், டைரக்டர் – ஒளிப்பதிவாளர் இடையே ஏற்பட்ட உரசல்தான் என்று கூறப்படுகிறது.
இப்படி பிரச்னைகளும், உரசல்களும் நிறைந்த படப்பிடிப்பிலும் நடிகர் அஜீத்குமார் ஜாலியாக தான் இருக்கிறார். தனக்கு ஷூட்டிங் இல்லாத நேரங்களில் மற்ற நடிகர்களை புகைப்படம் எடுத்து தருகிறார். அதுமட்டுமின்றி அஜீத்குமார் பிரியாணி சமைப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். அவரே கமகமக்கும் பிரியாணி செய்து, தனக்கு பிரியமானவர்களுக்கு பரிமாறி அசத்துபவர். விடாமுயற்சி படப்பிடிப்பில், சமீபத்தில் சிக்கன் கிரேவி செய்து, படக்குழுவினருக்கு பரிமாறி அசத்தியிருக்கிறார். சாப்பிட்ட பலரும், அந்த சுவையில் திக்குமுக்காடி போய், அடடா, என்ன டேஸ்ட் என அஜீத்தை பாராட்டி இருக்கின்றனர்.





