துணிவு படத்திற்கு நடிகர் அஜித்குமார் படத்தை யார் இயக்கிறார் என தொடர்ந்து கேள்வி எழ ஆரம்பித்தது. சிறுத்தை சிவா, சுதா கொங்கரா, விஷ்ணு வர்தன் என பலரது பெயர்கள் அடிபட, யாரும் எதிர்பார்க்காத வகையில் அஜித் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப் பட்டது. இதனை லைகா நிறுவனம் தயாரிப்பதாக தெரிவித்தது.

நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து எந்த மாதிரியான படத்தை எடுக்க போகிறார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்த ட்விஸ்ட்டாக விக்னேஷ் சிவன் படத்திலிருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அவர் இதிலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியானது.
இதனால் அஜித்தை இயக்கப் போவது யார் என மீண்டும் கேள்வி எழ, இந்த முறையும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்து சேர்ந்தார் மகிழ் திருமேனி. தடையற தாக்க, தடம், மீகாமன் உள்ளிட்ட கிரைம் திரில்லர் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, அஜித்தை வைத்து எப்படிபட்ட திரைப்படத்தை இயக்க போகிறார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

ஆனால், எதிர்பார்ப்பை எடுத்த எடுப்பிலேயே சுக்கு நூறாக்கும் வகையில், படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டது. முந்தைய படங்களில் உள்ள வி சென்ட்டிமென்ட்டை இதிலும் தொடர்வதாகவும், விடாமுயற்சி என்னும் தலைப்பு பொறுத்தமாக இல்லை என்றும் ரசிகர்கள் கூறி வந்தனர்.
இது ஒரு புறமிருக்க, டைட்டில் அறிவிக்கப்பட்டதோடு சரி, அதன்பிறகு எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாததால் கடும் அதிருப்தி அடைந்தனர் ரசிகர்கள். இதற்கு முக்கிய காரணமே அஜித்தான் என்றும், ஷூட்டிங்கிற்கு செல்லாமல் அவர் பைக் டூருக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இயக்குனர் மகிழ் திருமேனி அவஸ்தை படுவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது விடாமுயற்சியில் இருந்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது படத்தின் ஷூட்டிங் வரும் 18-ம் தேதி தொடங்க இருக்கிறதாம். அபுதாபி, சென்னை, புனே மற்றும் ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்த மகிழ் திருமேனி திட்டமிட்டிருக்கிறாராம். இதுபோக விடாமுயற்சியில் இரண்டு கதாநாயகிகள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே த்ரிஷா படத்தில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அடுத்த நடிகை ரோலுக்கு தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதாம். அத்துடன் விடாமுயற்சியில் அஜித்துக்கு மூன்று வில்லன்களாம். அர்ஜூன், அர்ஜூன் தாஸ் ஆகியோர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்க, மெயின் வில்லன் ரோலுக்கு பான் இந்தியா அளவில் ஒரு நட்சத்திரத்தை தேடி வருகிறார்களாம். ஆகஸ்ட் 15ம் தேதி ஒட்டுமொத்த அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலால் திக்குமுக்காடி போயுள்ள அஜித் ரசிகர்கள், அப்டேட் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.





