தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் பான் இந்தியா திரைப்படமாகவே உருவாகின்றன. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடா மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகின்றன. இதில் நடிகர் விஜய்க்கு, தமிழ் திரையுலகம் போலவே மலையாளத்திலும் மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால் அங்கு அவரது திரைப்படங்கள் வசூல் மழை பொழிகின்றன.
இதே போல் நடிகர் சூர்யாவிற்கும் தெலுங்கு மற்றும் கன்னட திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கு உதாரணமாக சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட வாரணம் ஆயிரம் திரைப்படத்தை கூறலாம். அதற்கு தெலுங்கு திரையுலகில் முதல் காட்சியைப் போலவே ஏராளமானோர் திரையரங்குகளில் கூடி அட்டகாசம் செய்தனர். இதன் வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.
இப்படியான சூழலில் முன்னணி நடிகர்கள் நேரடியாக தெலுங்கு படங்களில் நடிக்கவும் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். நடிகர் விஜய், வாரிசு திரைப்படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கு படத்தில் நடித்தார். இதனை தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளர் தில் ராஜு எடுத்தார். தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் உருவான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இதேபோல் கடந்த ஆண்டு தனுஷ் வாத்தி திரைப்படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார்.
ஏற்கனவே பாலிவுட், ஹாலிவுட் வரை சென்ற அவர், தெலுங்கிலும் கால் பதித்து விட்டதாக ரசிகர்கள் கூறினர். இதேபோல் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் வந்து தடம் தெரியாமல் ஓடிப்போனது. இப்படியான சூழலில் தற்போது மீண்டும் தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் நடிகர்களை வைத்து படம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
அதில் தற்போது முதலாவதாக விஜயின் பெயர் அடிபட்டுள்ளது. தற்போது அவர் வெங்கட் பிரபுவுடன் கோட் படத்தில் நடித்தவரும் சூழலில், அடுத்ததாக அவர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் இந்த திரைப்படத்தை தெலுங்கு நிறுவன, டி வி வி நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே, ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர் ஆர் ஆர் படத்தை தயாரித்திருந்தது. இப்படியான சூழலில் அடுத்து அந்த நிறுவனம் விஜயை வைத்து படம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறது.
இதேபோல் ஆதித் ரவிச்சந்திரன் உடன் அஜித் இணையும் திரைப்படத்தையும், தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி இருக்கிறது. இதற்காக அஜித்திற்கு மிகப்பெரிய தொகையில் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல் தனுஷும், தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா படத்தில் நடித்து வருகிறார். இதனையும் தெலுங்கில் ஒரு முன்னணி நிறுவனமே தயாரிக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் – இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் உடன் இணையும் திரைப்படத்தையும் தெலுங்கு நிறுவனமான ஸ்ரீ லட்சுமி மூவிஸ் இருக்கிறது. இப்படி முக்கிய ஹீரோக்கள் அனைவரும் தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பது, இங்குள்ள தயாரிப்பாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





