அஜித்குமார் தற்போது கார் பந்தயத்தில் பிசியாக இருக்கிறார். ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் அவர் கலந்து கொண்டு உள்ளார். இதற்காக அஜித்குமார் ரேஸ் கிளப் என்னும் அணியையும் அவர் நிறுவியுள்ளார். இந்த சமயத்தின்போது பேட்டி கொடுத்த அவர், அக்டோபர் மாதம் தனது அடுத்த திரைப்படத்தின் சூட்டிங் ஆரம்பமாகும் என்றும், அடுத்த ஆண்டு மே மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தார். இப்படியான சூழலில் அஜித்குமாரின் 64-வது திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் உடன்தான் அஜித் குமார் மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய திரைப்படமான குட் பேட் அக்லி, கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. முழுக்க முழுக்க மசாலா திரைப்படம் ஆகவும், அஜித்தை புகழ்ந்து வசனங்களும் காட்சிகளும் இடம் பெற்று இருந்த இந்தத் திரைப்படம், வசூல் மேல் வசூல் குவித்து சாதனை படைத்தது.
அதேசமயம் அந்த திரைப்படத்திற்கு எதிரான விமர்சனங்களும் அதிகம் எழுந்தன. வெறும் பழைய திரைப்பட பாடல்களை, படம் எங்கும் நிரப்பியிருப்பதாகவும், எதற்கெடுத்தாலும் பில்டப் காட்சிகள் இருக்கிறது என்றும் சாடினர். அதே சமயம், மசாலா திரைப்படம் என்றால் அப்படி இருக்கத்தான் செய்யும் எனவும் சிலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர்.
எது எப்படியோ இந்த திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குவித்து சாதனை படைத்து விட்டது. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மைத்திரி மூவிஸ் நிறுவனமும் லாபம் பார்த்து விட்டது. இந்த சூழலில் அடுத்ததாகவும், அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைய முடிவெடுத்திருக்கும் சூழலில், அதனை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கே ஜி எஃப் படத்தில் கதாநாயகி வந்த, ஸ்ரீநிதி ஷெட்டி இதில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்காக அஜித்குமாருக்கு 180 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருக்கிறதாம். திரைப்படத்தையும் 270 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளாராம். ஜிவி பிரகாஷே இந்த திரைப்படத்திற்கும் இசையமைக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





