நடிகர் அஜீத்குமார் நடிப்பில், கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கிய படம் விடாமுயற்சி. ஐந்து மாதங்கள் கடந்தும் இன்னும் இந்த படத்தின் ஷூட்டிங் முடியாமல் அந்தரத்தில் தொங்குகிறது. இந்த படத்தில் நடிக்க துவங்கிய அஜீத்குமார், இந்த படப்பிடிப்பை முடிக்காமலேயே தனது அடுத்த படமாக குட்பேட் அக்லி படத்தில் நடிக்க துவங்கி விட்டார்.
அஜர்பைஜானில் சில மாதங்கள் இந்த படப்பிடிப்பு நடந்த நிலையில், இயற்கை சீற்றங்களால், இந்த படத்தின் படப்பிடிப்பு அடிக்கடி தடைபட்டது. கடும் குளிர், மணல் புயல், கனமழை என பல காரணங்களால் படப்பிடிப்பை தொடர முடியாமல் திண்டாட்டம் ஏற்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பே நடக்காமல், படக்குழு சென்னையில் இருந்து வருகிறது.
இந்தியன் 2, இந்தியன் 3, வேட்டையன், கேம் சேஞ்சர், வேட்டையன், லால் சலாம் உள்ளிட்ட படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வந்த லைகா புரடக்சன்ஸ்தான், அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படத்தையும் தயாரித்தது. ஒரு கட்டத்தில் படத்துக்கான நிதியை, வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டதால், படத்தையே டிராப் செய்யும் முடிவுக்கு வந்து கிடப்பில் போட்டு விட்டது.
இப்போது இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆக உள்ளதால், அதில் வரும் வருவாயை வைத்து கிடப்பில் போட்டுள்ள விடாமுயற்சி படத்தை முடித்துவிடலாம் என லைகா புரடக்சன்ஸ் திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் வருகிற 20ம் தேதி முதல் 40 நாட்களுக்கு அஜீத்குமாரும் கால்ஷீட் தந்திருக்கிறார். அதற்குள் படப்பிடிப்பை முடித்தாக வேண்டிய நெருக்கடியில் டைரக்டர் மகிழ் திருமேனி இருக்கிறார்.
இந்நிலையில், படத்தில் முக்கிய கேரக்டர்களில் ஒருவரான நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாக மகன் உமாபதிக்கும் திருமணம் நடைபெற உள்ளதால், இப்போதைக்கு வர முடியாது. ஷூட்டிங்கை இன்னும் தள்ளிப் போடுங்கள் என்று டைரக்டரிடம் அர்ஜூன் கூறியிருக்கிறார்.
அஜீத்குமார் கால்ஷீட் தந்துள்ள 40 நாட்களுக்குள் படத்தை முடித்தாக வேண்டும். அதுவும் அர்ஜூன், ஆரவ், அஜீத்குமார், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா சேர்ந்து நடிக்க வேண்டிய காட்சிகள் நிறைய இருப்பதால், இவர்களை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் நடிக்க வைக்க முடியுமா, அதுவும் அர்ஜூன் கால்ஷீட் இல்லை என்கிற நிலையில், மகிழ் திருமேனி தடுமாறி வருகிறார். மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பு 20ம் தேதி நடக்குமா, என்பதே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.





