இந்த ஆண்டு வெளியாக இருந்த திரைப்படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன். இதற்குக் காரணம் அந்தப் படத்தின் இயக்குனர் ஞானவேல் தான். கூட்டத்தில் ஒருவன் எனும் திரைப்படத்தில் அறிமுகமாகி ஆரம்பத்திலேயே சறுக்கலை சந்தித்தவர் தான் ஞானவேல்.
ஆனால் ஜெய் பீம் என்னும் ஒரு திரைப்படத்தின் மூலம் அதை எல்லாம் அடித்து உடைத்து ஞானவேல் வெளியே வந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அதில் எந்தவித சமரசமும் செய்யாமல் தனக்கே உண்டான பாதையில் திரைக்கதையை அமைத்து அசத்தினார் ஞானவேல்.
படத்தில் ராஜாமணியாக வந்த மணிகண்டன், செங்கேணியாக நடித்த லிஜோமல் தாமஸ் இருவரும் தங்களது பங்கை சிறப்பாக அளித்தனர். இதேபோல் சூர்யாவும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி படத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
இப்படி அருமையான ஒரு திரைப்படத்தை கொடுத்த ஞானவேல் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சேர்ந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும். அதன்படியே விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி முடித்தார் ஞானவேல். லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் கடந்த பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து, ரஜினிக்கு மாஸ் காட்சிகளை வைக்க வேண்டும் என ஞானவேல் ஆசைப்பட்டதால், படம் இரண்டு பக்கமும் செல்லாமல் கலவையான ஒரு விமர்சனத்தை பெற்றது. குறிப்பாக பலரும் படத்தின் இரண்டாம் பாதி சரி இல்லை என்று தெரிவித்து வந்தார்கள். அதேசமயம், நான்கே நாளில் படம் 270 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
தொடர்ந்து படத்திற்கு ஆடியன்ஸ்கள் படையெடுத்து வரும் சூழலில், வேட்டையன் திரைப்படத்திற்கான வெற்றியை கொண்டாடி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அறிவித்து, படக்குழுவினருக்கு அவர் பிரியாணி போட்டு இருக்கிறார். இதில் வேட்டையனில் இடம்பெற்ற, ரித்திகா சிங்கும் கலந்துகொண்டு பட குழுவினருக்கு பிரியாணி வழங்கி அசத்தினார்.





