எந்திரன் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு பிரம்மாண்டமான படத்தை கையில் எடுத்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதில் தெலுங்கின் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க, அதனை இயக்குகிறார் அட்லி. அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
புஷ்பா படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்ததன் மூலம் உலகம் போற்றும் நாயகனாக உருமாறி இருக்கிறார் அல்லு அர்ஜுன். தெலுங்கு சினிமாவை தாண்டி அவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இத்திரைப்படத்தின் மூலம் உருவாகி இருக்கிறது.
இதன் காரணமாக தற்போது அனைவரும் உற்றுநோக்கும் கதாநாயகனாக அவர் மாறியிருக்கிறார். இந்த நிலையில் அல்லு அர்ஜுனின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், த்ரி விக்ரம் இயக்கத்தில் அவர் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்குகிறது.
தொடர்ந்து புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்திலும் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் அல்லு அர்ஜுன். இதன் நடுவே அட்லியின் திரைப்படத்திலும் நடிக்க தற்போது கமிட்டாகி இருக்கிறார். இதில் அல்லு அர்ஜுனுக்கு இரண்டு கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிப்பதாகவும் சொல்கிறார்கள்.
தற்போது இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் இதனை தயாரிக்கிறார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி இருவரும் சென்னை வந்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அது அறிவிப்பின் வீடியோ மூலம் உறுதியாகி உள்ளது. தொடர்ந்து அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும், அமெரிக்கா சென்றிருக்கும் வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அங்கு பிரம்மாண்டமான கிராபிக்ஸ் நிறுவனத்தில் இருவரும் அது பற்றி பேசுவது போன்ற காட்சி இருக்கிறது. சொல்லப்போனால் இந்த திரைப்படம் சூப்பர் ஹீரோ ஃபார்மெட்டில் உருவாவது காட்சிகளை பார்க்கும்போதே தெரிவதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். கிராபிக்ஸ் நிறுவனத்தின் கைதேர்ந்தவர்கள், இந்தக் கதையை கேட்கும் போது தலையே சுற்றி விட்டது, இதனை நம்பவே முடியவில்லை எனக் கூறுகின்றனர். இந்த திரைப்படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு 200 கோடி ரூபாயும் அட்லிக்கு 100 கோடி ரூபாயும் சம்பளம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





