சமீபத்தில் இயக்குனர் பாலாவுக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது. கடந்த 1999ம் ஆண்டில் சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலா, நடப்பாண்டில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். அதற்காக பாலா 25 என்ற பாராட்டு விழாவும், வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் ஒன்றாக நடத்தப்பட்டது.
இந்த விழாவில் நடிகர்கள் சூர்யா சிவக்குமார் சிவகார்த்திகேயன் அருண் விஜய் இயக்குனர்கள் மணிரத்னம் விக்ரமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆனால் பாலா இயக்கிய படங்களில் நடித்த விக்ரம் ஆர்யா அதர்வா உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. தாரை தப்பட்டை படத்தில் நடித்த சசிக்குமார் அப்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றிருந்ததால் வரவில்லை.
இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா, இயக்குனர் பாலா குறித்து உருக்கமாக பேசினார். அவர் மட்டும் நந்தா படத்தில் என்னை நடிக்க அழைக்கவில்லை என்றால், இன்று சூர்யாவாக இந்த மேடையில் நின்றிருக்க மாட்டேன். நந்தா படத்தில் நடித்த பிறகுதான் காக்க காக்க கஜினி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது என்றார்.
விழாவில் ஒரு பகுதியாக நடிகர் சிவக்குமார், இயக்குனர் பாலா மேடையில் அமர்ந்து கேள்வி கேட்கும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது நடிகர் சிவக்குமார், பாலாவிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் வெளிப்படையாக பதில் அளித்தார். ரஜினி கமல் படங்கள் இயக்க வாய்ப்பு வந்தாலும், கால்ஷீட் தந்தாலும் அவர்களது படங்களை இயக்க மாட்டேன் என்று பாலா அதிரடியாக பதிலளித்தார்.
அப்போது, சின்ன வயதில் நீங்க பார்த்த படம் எது, நான் முதல் முறையா சந்திரலேகா படம் பார்த்தேன். அப்படி நீங்க பார்த்த முதல் படம் கொஞ்சம் கஷ்டப்பட்டு ஞாபகப்படுத்தி கரெக்டா சொல்லுங்க என்று சிவக்குமார் கேட்டார். அதற்கு இயக்குனர் பாலா, ஆட்டுக்கார அலமேலு என சிவக்குமார் நடித்த படத்தையே சொன்னார்.
அய்யோ, ஏய்யா ஒரு நல்ல படமா சொல்லக் கூடாதய்யா. இப்படி என்னை டேமேஜ் பண்ணுவியா. இத்தனை வருஷம் ஆகிப்போச்சு, சிந்து பைரவி பண்ணியிருக்கேன். ரோசாப்பூ ரவிக்கைகாரி நடிச்சிருக்கேன். கிராமத்துக்கு போனா, அண்ணே உங்க ஆட்டுக்கார அலமேலு படம் பார்த்தேன் என்பார்கள். அட வேற நல்ல படமே கிடைக்கலயே என்பேன். இந்த மனுஷனும் அதையே சொல்றார். என்ன பண்றது. ஆட்டுக்கார அலமேல படத்தை பத்தி கேட்டா சின்னப்ப தேவரு, அதுல ஆடு நடிச்சிருக்கு, அலமேலுவா ஸ்ரீப்ரியா நடிச்சிருக்கு, சிவக்குமாரும் நடிச்சிருக்கார்ன்னுதான் சொல்வார் என்று அவர் நடித்த படத்தையே கலாய்த்தார் நடிகர் சிவக்குமார்.





